செய்திகள்

கொடநாடு எஸ்டேட் மேலாளர் நாளை ஆஜராக உத்தரவு - வருமான வரித்துறை நடவடிக்கை

Published On 2017-11-15 04:56 GMT   |   Update On 2017-11-15 04:56 GMT
கொடநாடு எஸ்டேட் மேலாளர் நாளை ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
கோவை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இதன் அருகில் சசிகலாவுக்கு சொந்தமான கிரீன் டீ எஸ்டேட் இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டை மேலாளர் நடராஜன் கவனித்து வருகிறார்.

கடந்த 9-ந் தேதி இங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கிரீன் டீ எஸ்டேட்டில் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று 6-வது நாளாக இந்த சோதனை நடைபெற்றது. கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கிரீன் டீ எஸ்டேட் மேலாளர் பழனிகுமாரையும் நேற்று முன்தினம் முதல் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்தனர்

நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கிரீன் டீ எஸ்டேட்டுக்கு சென்ற அதிகாரிகள் ஒரு சூட்கேஸ் மற்றும் 4 பைகளில் ஆவணங்களை எடுத்து வந்தனர்.

இந்த சோதனையில் சென்னை, மன்னார்குடி, ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் குறித்த ஆவணங்ளும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

நேற்று காலை முதல் கொடநாடு மற்றும் கிரீன் டீ எஸ்டேட் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில் கிரீன் டீ எஸ்டேட் மேலாளர் பழனி குமார் உள்ளிட்ட 20 பேர் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8.43 மணிக்கு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்குள்ள ஒரு அறையில் வைத்து நடராஜனிடம் தொடர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை இரவு 11 மணி வரை நடந்தது. அதன் பின்னர் அவரை அனுப்பி வைத்தனர். மீண்டும் நாளை (16-ந் தேதி) ஆஜராகுமாறு நடராஜனுக்கு சம்மன் அனுப்பினர்.

நடராஜன் பெயரில் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட எஸ்டேட் வாங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை வைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News