செய்திகள்

பண மதிப்பு நடவடிக்கையை எதிர்த்து தஞ்சையில் தி.மு.க-காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2017-11-08 10:31 GMT   |   Update On 2017-11-08 10:31 GMT
தஞ்சையில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை எதிர்த்து திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர்:

பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. நரேந்திர மோடி 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட தினமான நவம்பர் 8-ந் தேதியை கருப்பு தினமாக கருதி போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நவம்பர் 8-ந் தேதி கருப்பு தினமாக கருதி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

அதன்படி தஞ்சை மாவட்ட தி.மு.க. சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு உயர் நிலை செயல் திட்டகுழு உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ துரை சந்திரசேகர், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, நகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம், தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அமர்சிங் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களது சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

திருவாரூர்- நாகை மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக இன்று நடைபெற இருந்த தி.மு.க ஆர்ப்பாட்டம் ஏற்கனவே ரத்து செய்து அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி திருவாரூர், நாகையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறவில்லை.
Tags:    

Similar News