செய்திகள்

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து தி.மு.க., காங். போராட்டம்: மு.க.ஸ்டாலின் - திருநாவுக்கரசர் பங்கேற்பு

Published On 2017-11-08 06:20 GMT   |   Update On 2017-11-08 08:30 GMT
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாம் ஆண்டு தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. மு.க.ஸ்டாலின் மதுரையிலும், திருநாவுக்கரசர் சென்னையிலும் கலந்து கொண்டனர்.
மதுரை:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு இதே தினத்தன்று தான் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.

நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இந்த அறிவிப்பு சுனாமி அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 1 மாதம் மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் வரிசையில் நின்று வாடி வதங்க நேரிட்டது.

மோடி ஏன் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து விட்டு புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை அறிமுகம் செய்தார் என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்தது. அதற்கு மத்திய அரசு தரப்பில், “கருப்புப் பணத்தை ஒழிப்பது, ஊழலை அகற்றுவது, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது, ரொக்கப் பணப்பரிவர்த்தனையை குறைப்பது, வரி வருவாயை அதிகரிக்க செய்வது ஆகிய 5 குறிக்கோள்களை இலக்காகக் கொண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை கேட்டதும், நாட்டு நலனுக்காக பண மதிப்பு நீக்கப்பட்டிருப்பதால் அதை ஏற்கலாம் என்று கணிசமானவர்கள் கருதினார்கள். இயல்பு வாழ்க்கையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட இடையூறுகளை கூட சமாளித்துக் கொண்டனர்.

தற்போது பண மதிப்பு நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டு மிகச்சரியாக ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், அது வெற்றியா அல்லது தோல்வியா என்பதை அறிந்து கொள்ள மக்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது. இந்த நவம்பர் 8-ந்தேதியை “கருப்பு தினம்” ஆக கடைபிடித்து எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. நாடு முழுவதும் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் முடிவு செய்தன.

அதன்படி இந்தியா முழுவதும் இன்று பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். பல இடங்களில் வணிகர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார். சூரத் நகரில்தான் பெரும்பாலான சிறு-குறு தொழில்கள் பண மதிப்பு நீக்கத்தால் முடங்கின. எனவே ராகுல்காந்தி அந்த நகரை தேர்வு செய்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.

டெல்லி கன்னட் பிளே சில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் குலாம் நபி ஆசாத் கலந்து கொள்கிறார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்வேகம் அதிகமாக காணப்பட்டது. காங்கிரசின் கூட்டணி கட்சிகளும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றன.

காங்கிரஸ் கூட்டணியில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க. இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்வதால் 8 மாவட்டங்களில் மட்டும் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மற்ற இடங்களில் திட்டமிட்டப்படி தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அண்ணா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர். அவர்கள் மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

திருச்சியில் துரைமுருகனும், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமி, நாமக்கல்லில் வி.பி.துரைசாமி, கோவையில் கனிமொழி, ஈரோட்டில் டி.கே.எஸ். இளங்கோவன், தஞ்சையில் டி.ஆர்.பாலு தலைமையிலும் கருப்பு தினம் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னையில் மூன்று இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தேசிய பொருளாதார பேரிடர் தினமாக இதை கடைபிடிக்கின்றனர். வேப்பேரி பெரியார் திடலில் இன்று மாலை 5 மணிக்கு கண்டன கூட்டம் நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் சவுந்தரராஜன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

Tags:    

Similar News