செய்திகள்

கோவையில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

Published On 2017-10-19 04:12 GMT   |   Update On 2017-10-19 04:13 GMT
கோவையில் மாணவர்கள் இருவர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:

கோவை ஆர்.கே. புதூரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் பிரவிண் குமார் (15). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கோவை சுண்டக்கா முத்துர் ரூபா நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் விக்னேஸ்வரன் (12). அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்கள் தங்கள் நண்பர்களுடன் கோவை குனியமுத்தூரில் உள்ள செங்குளத்திற்கு நேற்று மாலை குளிக்க சென்றனர். அவர்கள் குளத்தில் இறங்கிய போது விக்னேஸ்வரன், பிரவிண் குமார் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர்.

அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். சக நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

உடனே மற்ற நண்பர்கள் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பிரவிண் குமார் உடலை மீட்டனர். விக்னேஸ்வரன் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும், குனிய முத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் அருணாசலம் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விக்னேஸ்வரன் உடலை மீட்டனர்.

பின்னர் இருவரது உடல்களும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர்கள் இருவர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News