உள்ளூர் செய்திகள்

கோவையை குளிர்வித்த கோடை மழை

Published On 2024-05-07 06:53 GMT   |   Update On 2024-05-07 06:53 GMT
  • பொதுமக்கள் மழை பெய்ய வருண பகவானை வேண்டி வந்தனர்.
  • கடந்த சில தினங்களாக கோவை புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது.

கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. பகல் நேரங்களில் அனல் பறக்கும் வெயிலால் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

வீட்டிற்குள் இருந்தாலும் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாது. மின்விசிறி ஓடினாலும் அதனையும் தாண்டி வீட்டிற்குள் வெப்பம் நிலவி வந்தது.

கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எங்காவது நிழல் கிடைத்தால் சற்று நேரம் அங்கு நின்று இழைப்பாறி சென்று வருகின்றனர்.

வழக்கமாக கோவையில் ஏப்ரல் மாதத்திலேயே கோடை மழை தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிந்து மே முதல் வாரம் ஆகியும் இதுவரை மழையே பெய்யவில்லை.

கடுமையான வெப்பமே நீடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் மழை பெய்ய வருண பகவானை வேண்டி வந்தனர். பல்வேறு இடங்களில் வழிபாடுகள், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைப்பது எனவும் நடத்தப்பட்டது.

கடந்த சில தினங்களாக கோவை புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. ஆனால் மாநகர பகுதியில் மழை பெய்யவில்லை. மாறாக சூறைக்காற்று வீசியது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோவை மாநகர பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டி தீர்த்தது. பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலையம், அவினாசி சாலை, காந்திபுரம், ராமநாதபுரம், புலியகுளம், டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், உக்கடம், காந்தி பார்க் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது.

இந்த திடீர் மழையால் கோவையில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியது. இரவிலும், இன்று காலையும் குளிர்ச்சியான காற்றும் வீசியது.

கோவையில் இன்று காலையும் வெயில் குறைந்து மேகமூட்டமாகவே காணப்படுகிறது.

இந்த திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளதால் மழையை எதிர்பார்த்து கோவை மக்கள் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News