தமிழ்நாடு செய்திகள்

செங்கல்பட்டு - திருவள்ளூர் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் பிரசாரம்

Published On 2025-12-27 15:04 IST   |   Update On 2025-12-27 15:04:00 IST
  • திருப்போரூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சோழிங்கநல்லூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
  • எடப்பாடி பழனிசாமி 30-ந்தேதி மாலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.

அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஜூலை மாதம் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இதுவரை பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்துள்ளார். 175 சட்டமன்ற தொகுதிகளில் தனது சுற்றுப்பணத்தை அவர் முடித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் சேர்ந்த பிறகு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி தனது பலத்தை அங்கும் காட்டினார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.

இதுவரை 175 சட்டமன்ற தொகுதிகளில் தனது பிரசாரத்தை முடித்துள்ள எடப்பாடி பழனிசாமி நாளை மாலையில் 176-வது தொகுதியாக திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக திருப்போரூர் அருகில் உள்ள தையூர் பகுதியில் பிரமாண்டமான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு மேடையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மேடையில் எடப்பாடி வருவதற்கு முன்பு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை இங்கிருந்து தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வரும் பஸ்சில் இருந்தபடியே பேசுகிறார்.

திருப்போரூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சோழிங்கநல்லூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். பிரதான சாலையில் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி. கந்தன் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்து உள்ளார். 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் காலி இடம் ஒன்று தயார் செய்யபபட்டு உள்ளது.

எடப்பாடி பழனசாமி வேனில் நின்று பேசுவதற்கான இடமும், பொதுமக்கள் திரண்டு நிற்பதற்கான இடமும் தயார் செய்யப்பட்டு உள்ளது. மாலை நேரத்தில் வருவதால் அந்த பகுதி முழுவதும் மின் விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டு உள்ளன.

பெருங்குடியில் இருந்து பிரசாரம் நடைபெறும் எம்.ஜி.ஆர். சாலை வரை வரவேற்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. வழிநெடுக கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் நாளை மறுநாள் திருத்தணி, திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.

திருத்தணி அருகே உள்ள வீரகநல்லூர் பகுதியில் (29-ந்தேதி) மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வதற்காக மைதானம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசார பஸ்சில் இருந்தபடியே அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

இந்த பிரசாரத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர் அருகில் உள்ள திடலில் மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

இதன் பிறகு சென்னை திரும்பும் எடப்பாடி பழனிசாமி 30-ந்தேதி மாலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

மாலை 4 மணியளவில் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கவரப்பேட்டையில் திறந்தவெளி மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுதி எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளும் 180-வது சட்டமன்ற தொகுதியாகும்.

இதுவரை 6 கட்டங்களாக தனது பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ள எடப்பாடி பழனிசாமி 7-வது கட்டமாக சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் நாளை முதல் சுற்று பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமர வேல், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் பி.வி.ரமணா, சிறுணியம் பலராமன், திருத்தணி கோ. அரி, ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை ரவி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் நாளைய சுற்றுப்பயணத்தை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News