தமிழ்நாடு செய்திகள்

திருச்சி ரெயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர் - டிடிவி தினகரன் கண்டனம்

Published On 2026-03-04 17:07 IST   |   Update On 2026-03-04 17:07:00 IST
  • ரெயில்வே நுழைவாயிலில் ”கர்தவ்ய த்வார்” என இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது
  • இந்தியில் மட்டுமே எழுதி வைத்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திருச்சி ரயில்வே மண்டல மேலாளர் அலுவலக நுழைவாயிலில் தமிழில் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் – இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் அதிகாரிகளுக்கு ரயில்வே துறை அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

திருச்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் "கர்தவ்ய த்வார்" என இந்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாள்தோறும் தமிழக மக்களும், ஏராளமான ரயில் பயணிகளும் வந்து செல்லும் ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி வைக்க வேண்டிய பெயர்ப் பலகையை இந்தியில் மட்டுமே எழுதி வைத்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

எனவே, பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் திருச்சி ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் தமிழில் பெயர் வைக்கப்படுவதை உறுதி செய்வதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் ரயில்வே துறையையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News