தமிழ்நாடு

மகேந்திரன்.

சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது

Published On 2024-05-07 06:38 GMT   |   Update On 2024-05-07 06:39 GMT
  • கைது செய்ய சென்ற போலீசாரை தரக்குறைவாக பேசியது உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
  • வழக்கு தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது.

தேனி:

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூ-டியூபர் சவுக்கு சங்கரை தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பூதிப்புரம் ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 3-ந் தேதி அதிகாலை சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவருடன் தங்கி இருந்த சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராம்பிரபு, பரமக்குடியைச் சேர்ந்த ராஜரத்தினத்தை விசாரித்தனர்.

அவர்கள் வந்த காரில் சோதனை செய்தபோது 2.6 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நடமாடும் தய அறிவியல் ஆய்வு வாகனம் மூலம் ஆய்வு செய்த போலீசார் சவுக்கு சங்கர், ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகிய 3 பேர் மீதும் கஞ்சா கடத்தல் வழக்கு, கைது செய்ய சென்ற போலீசாரை தரக்குறைவாக பேசியது உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

சவுக்கு சங்கர் கோவைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் 4-வது நபராக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆரைக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த திருமால் மகன் மகேந்திரன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சவுக்கு சங்கருக்கு மகேந்திரன் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவரிடம் இருந்து 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்ட நீதிமன்றத்தில் 1 கிலோவுக்கு உட்பட்ட கஞ்சா வழக்குகள் மட்டுமே விசாரிக்க முடியும். ஆனால் மொத்தம் 3 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளதால் இந்த வழக்கு தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது என்றனர்.

Tags:    

Similar News