'முகமெல்லாம் கருத்துவிட்டது... மனம் வேதனையடைகிறது' - நல்லகண்ணுவை பார்த்தபின் கண்ணீர்மல்க பேட்டியளித்த மன்சூர் அலிகான்
- சிறுநீரகம் செயலிழந்துவிட்டது, டயாலிசிஸ் செய்யமுடியாது எனக்கூறுகிறார்கள்.
- என்னை நினைத்து வெட்கி தலைக்குனியவும் செய்கிறேன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அய்யா வயதுமுதிர்வு காரணமாக உடல்நலம் குன்றி, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் அவரை நேரில் சென்று பார்த்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
"அய்யா நல்லக்கண்ணு பள்ளிப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். வாழ்நாள் முழுவதும் ஒரு போராளியாக, எளியவர்கள் பக்கம் நின்றவர். 'தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்ற குறளுக்கு ஏற்ப வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். ஒரு உன்னத மனிதராக வாழ்ந்து இப்போது மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்.
சுதந்திரத்திற்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். சுதந்திர இந்தியாவில் 7 முதல் 8 ஆண்டுகள் சிறைக்கைதியாக வாடினார். சிறையில் பல துன்பங்களை அடைந்தும் கொள்கையை விடாமல் இன்றும் வாழ்பவர். இப்படி ஒரு மனிதன் வாழ்ந்த தமிழ்நாட்டில் நானும் இருக்கின்றேன் என்பதை நினைக்கும்போது எனக்கு பெருமையாகவும், அதேநேரத்தில் என்னை நினைத்து வெட்கி தலைக்குனியவும் செய்கிறேன். எளிமையான போராளி.
அவரின் இந்த நிலை மிகவும் வேதனையை தருகிறது. சிறுநீரகம் செயலிழந்துவிட்டது, டயாலிசிஸ் செய்யமுடியாது எனக்கூறுகிறார்கள். அவரது முகமெல்லாம் கருத்துவிட்டது. ஒரு மாபெரும் தமிழர், போராளி. அவரது அர்ப்பணிப்பு ஈடுசெய்யமுடியாது. அவர் இந்த பூமியில் வாழ இறைவன் வழிவகை செய்யவேண்டும்." என கண்களில் கண்ணீர் நிற்க வேதனையுடன் பேசினார்.