செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் மழையால் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

Published On 2017-10-16 10:18 GMT   |   Update On 2017-10-16 10:18 GMT
தமிழகத்தில் பெய்து வரும் பருவ மழை காரணமாக, 150 மில்லியன் லிட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் கூறினார்.
ஆம்பூர்:

ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாளுக்கு நாள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வேலூர் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன.

வேலூர் மாவட்ட பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பாலாற்று பகுதியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாய் இணைப்புகள் சேதமடைந்துள்ளன.

வேலூர் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 1,300 மி.மீ., வட்டம் (அகலம்) கொண்ட பிரதான குழாய் இணைப்புகளில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பாலாற்றில் புதைக்கப்பட்ட குழாய் இணைப்பில் ஏற்பட்ட பழுதை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஷ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பருவமழை காரணமாக பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் இணைப்புகள் சேதமடைந்துள்ளன.

இதனால், வேலூர் மாநகராட்சி, பேரணாம்பட்டு, குடியாத்தம், மேல்விஷாரம், வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உட்பட 7 நகராட்சிகளுக்கும், ஒடுக்கத்தூர் பள்ளிகொண்டா பேரூராட்சிகள், அணைக்கட்டு, ஆற்காடு, கே.வி.குப்பம், காட்பாடி, கணியம்பாடி, வேலூர், வாலாஜா, பேரணாம்பட்டு மற்றும் மாதனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காவிரி குடிநீருக்கு பதிலாக, அந்தந்த பகுதிகளில் உள்ள நீராதாரங்களிலிருந்து குடிநீரை வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் பருவ மழை காரணமாக, 150 மில்லியன் லிட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து, அவற்றை உடனடியாக சரி செய்ய குடிநீர் வடிகால் வரியத்தின் செயற்பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் நீர்நிலை பகுதிகளில் பூமியில் புதைக்கப்பட்டுள்ள குழாய் இணைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணி தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றில் நீர் வடிந்த பிறகு காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் இணைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மழை வெள்ளத்தால் குடிநீர் குழாய் இணைப்பு உடைந்தாலோ அல்லது நீர் கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும். குடிநீர் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

பாலாற்றில் மணல் கொள்ளை காரணமாக குடிநீர் குழாய் இணைப்புகள் சேதமடைவதாக, பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. எனவே, காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தினால், அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News