செய்திகள்

4 ஆண்டுக்கு பிறகு கருத்தடை செய்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

Published On 2017-10-11 07:35 GMT   |   Update On 2017-10-11 07:35 GMT
4 ஆண்டுக்கு பிறகு கருத்தடை செய்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ரூ.2½ லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி சென்னை மாநகராட்சிக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை:

பழைய மகாபலிபுரம் ரோட்டில் உள்ள கந்தன் சாவடியை சேர்ந்தவர் ஏஞ்சல். கூலித்தொழிலாளி. கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி அங்குள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் 3-வது குழந்தை பெற்றார்.

அதை தொடர்ந்து அங்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.

ஆனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மீண்டும் அதே ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

வறுமையில் வாடுவதால் இக்குழந்தை வேண்டாம். கருச்சிதைவு செய்யும்படி வலியுறுத்தினார். ஆனால் நாள் கடந்துவிட்டதால் அது ஏஞ்சல் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று கருதி கருச்சிதைவு செய்ய டாக்டர்கள் மறுத்து விட்டனர். எனவே அவருக்கு 4-வதாக பெண் குழந்தை பிறந்தது.

இதை தொடர்ந்து மாநகராட்சி ஆஸ்பத்திரி மீது ரூ.3 லட்சம் நஷ்டஈடு கேட்டு நுகர்வோர் கோர்ட்டில் ஏஞ்சல் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணை 10 ஆண்டுகள் நடைபெற்றது.

இந்த நிலையில் ஏஞ்சலுக்கு ரூ.2½ லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி சென்னை மாநகராட்சிக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஏஞ்சலின் மன உணச்சலுக்காகவும், குழந்தையை பராமரிக்கவும் இது வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News