செய்திகள்

குடிநீர் கேட்டு ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிட்ட மக்கள்

Published On 2017-10-10 10:08 GMT   |   Update On 2017-10-10 10:08 GMT
தேனி அல்லிநகரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

தேனி:

தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள குருவியம்மாள் குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனால் பொதுமக்கள் ஆவேசத்தில் இருந்தனர். இன்று காலை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நகராட்சி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக அரசு அலுவலர்களுடன் சென்றார்.

துணை முதல்வர் வந்துள்ள செய்தி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிட்டனர்.

எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை பல மாதங்களாக நீடித்து வருகிறது. அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே நீங்கள் இப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறினர்.

உடனே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதிகாரிகள் பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News