search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "besieged"

    • வைப்புத்தொகை சலுகையை 500 சதுர அடி குடியிருப்பிற்குள் வழங்க வேண்டும்
    • மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது ஏழை மக்கள் குடியிருப்பில் உள்ள பொது குழாய்களை அகற்றக்கூடாது, வைப்புத்தொகை சலுகையை 500 சதுர அடி குடியிருப்பிற்குள் வழங்க வேண்டும், அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அப்போது போராட்டக்காரர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    • இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • பல்லடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வழிபாட்டு தலத்திற்கு வரி கட்டுவதற்காக சிலர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அந்தத் தரப்பினரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மற்றொரு தரப்பினர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவில் திருவிழா நடத்த தடை
    • லால்குடி பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள் புரம், கீழ அன்பில் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. வழக்கமாக நடப்பு ஆண்டில் இன்று( திங்கட்கிழமை) இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நடைபெறும். ஆனால் நடப்பு ஆண்டு விழாவுக்கு உதவி கலெக்டர் அனுமதி மறுத்துள்ளார்.அதைத்தொடர்ந்து கிராம மக்கள் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் பிரதீப் குமாரிடம் புகார் மனு அளித்தனர்.பின்னர் அவர்கள் கூறும் போது, ஆண்டாண்டு காலமாக முந்தைய வழக்கப்படி சாமி திருவீதி உலா நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒரு சமூகத்தினர் தங்களது தெருக்களுக்கும் திருவீதி உலா அழைத்து வர வேண்டும் என நீதிமன்றத்தை நாடினர்.ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையும் கோவில் திருவிழாவை நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் உதவி கலெக்டர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி கோவில் விழாவை நடத்த அனுமதி மறுத்து வருகிறார்.தன்னிச்சையாக செயல்படும் அவரை மாற்றிவிட்டு கோவில் திருவிழாவை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றனர். முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    • புதுவையில் பேனர்-கட் அவுட்டுகள் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
    • புதுவையில் பேனர், கட் அவுட்டுகள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.

    புதுச்சேரி:

    புதுவையில் பேனர்-கட் அவுட்டுகள் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    புதுவையில் பேனர்- கட் அவுட் வைக்க தடை சட்டமும் அமலில் உள்ளது. இருப்பினும் புதுவையில் பேனர், கட் அவுட்டுகள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.

    இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டரை கண்டி த்தும், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரியும் சமூக அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

    இதன்படி தந்தை பெரியார் திராவிட கழகம் சிந்தனையாளர் பேரவை, அண்ணா பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட 10-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் ராஜீவ் காந்தி சிலை அருகே திரண்டனர்.

    மக்கள் வாழ்வுரிமை ஜெகநாதன், அண்ணா பேரவை சிவஇளங்கோ, திராவிடர் விடுதலை கழகம் லாகு அய்யப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், சிந்தனையாளர் பேரவை கோ.செல்வம், தலித் சிறுத்தைகள் அறிவுமணி, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, எஸ்.டி.பி.ஐ. பரக்கத்துல்லா, நாம் தமிழர் கட்சி ரமேஷ் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அவர்களை போலீசார் வழுதாவூர் சாலையில் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தை நரிக்குறவர் இன மக்கள் முற்றுகையிட்டனர்.
    • குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    அப்போது தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் காரை ஆர்.சுப்ரமணியன் தலைமையில், ஆலத்தூர் தாலுகா மலையப்ப நகரை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் பெரம்பலூர் அருகே விஜயகோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் டயர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை, இரவு நேரத்தில் வெளியேறும் கரும்புகையினால், அதனை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தற்போது ஆலையில் நிலக்கரி மூலம் எந்திரங்களை இயக்குவதற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனை ஓட்டம் முடிந்தவுடன் நிலக்கரி மூலம் அனைத்து எந்திரங்களையும் இயக்குவதற்கு ஆலை தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் ஏற்கனவே நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு ஆலையை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமும், குடிநீரும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலையின் பின்புறம் உள்ள காரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்ப நகரில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களும், ராமலிங்க நகரில் வசித்து வரும் கலைக்கூத்தாடிகள் குடும்பங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நரிக்குறவர்கள் வீட்டிற்கு சென்று உணவருந்தி குறைகளை கேட்டு வரும் முதல்-அமைச்சர், ஆலையில் நிலக்கரி மூலம் எந்திரங்கள் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் மாவட்ட கலெக்டர் அந்த ஆலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் நாளை (புதன்கிழமை) ஆலையில் நிலக்கரி பயன்பாட்டை மிகப்பெரிய அளவில் தொடங்கி வைக்க நடைபெற்ற வரும் விழா ஏற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்த டயர் தொழிற்சாலையில் எப்போதுமே நிலக்கரியை பயன்படுத்தக்கூடாது. மேலும் இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

    • பசுந்தேயிலை கொள்முதலில் கோட்டா முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தொழிற்சாலையில் அங்கத்தினர்களாக உள்ளனர்

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. பிக்கட்டி, முள்ளிகூர், பாரதியார்நகர், கெரப்பாடு, குந்தாகோத்தகிரி, சிவசக்திநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தொழிற்சாலையில் அங்கத்தினர்களாக உள்ளனர்.

    இவர்களிடம் இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலையை கொண்டு தொழிற்சாலையில் தேயிலைதூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் பிக்கட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தற்போது தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதால் கூட்டுறவு தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வரத்து கூடியுள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களாக விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் கோட்டா முறை அமல்படுத்தப்பட்டது.

    இந்த நடைமுறையால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை விநியோகிக்க முடியும். தேயிலை மகசூல் அதிகரித்துள்ள நிலையில் தங்களிடம் இருந்து குறைந்த அளவு பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாய உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் மேலும் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் அதிருப்தி அடைந்த விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று பிக்கட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.

    தொடர்ந்து பசுந்தேயிலை கொள்முதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் விவசாயிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் தொழிற்சாலை நுழைவு கேட் அருகே சென்று தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். விவசாய உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் பேசிய நிர்வாக இயக்குனரை இடம் மாற்றம் செய்ய வேண்டும். பசுந்தேயிலை கொள்முதலை முறைபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

    இந்நிலையில் நிர்வாக இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். பசுந்தேயிலை கொள்முதலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிர்வாகத்தரப்பில் சுமுக பேச்சுவார்தை நடத்தாவிட்டால் இன்று முதல் தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை விநி யோகிப்ப தில்லை என விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினார்கள். 

    அடையாள அட்டை வழங்க மறுத்ததால் அ.புதூர் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் அ.புதூர் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 1200-க்கும் மேற்பட்டோர் பணி  செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு அடையாள அட்டை புதுப்பிக்கும் பணி கடந்த மாதத்தில் முடிவடைந்த நிலையில் பணிபுரிபவர்களுக்கு புதிய அட்டை வழங்க  ஊராட்சி நிர்வாகம் தாமதப்படுத்தி வந்தனர்.  மேலும், ரூ.1000  கட்டினால் மட்டுமே உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த   200- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊராட்சி   மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகுடஞ்சாவடி  போலீசார்  சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இப்பிரச்சினை குறித்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்பந்தப்பட்ட  அதிகாரிகளோ, ஊராட்சி தலைவரோ நேரில் வரவில்லை.  அதுமட்டுமல்லாமல் இந்த ஊராட்சி மன்றத்திற்கு ஊராட்சி செயலர் இல்லாதது பெரும் குறைபாடாக இருந்து வருகிறது. 

     4 மணி நேரத்துக்குப் பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி தள  பொறுப்பாளர்களை வைத்து புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் கூறியதாவது:-

     அ. புதூர் ஊராட்சி மன்றத்திற்கு ஊராட்சி செயலர் இல்லாததால் இப்பகுதியில் நடைபெறும் ஊராட்சி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது எனவும், ஏற்கனவே ஜல் ஜீவன் குடிநீர் குழாய் இணைப்பு பெறப்பட்ட வீட்டிற்கு தண்ணீர் வருவதில்லை எனவும், இது குறித்து ஒன்றிய ஆணையாளரிடம்  தெரிவித்தால், அவர் தலைவர் சொல்படி கேளுங்கள் என்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்
    வேலூர் மாவட்ட அரசு பள்ளியில் ஆசிரியை பணியிட மாற்றத்தை கைவிடக்கோரி மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோரும் பள்ளியை முற்றுகையிட்டனர்.
    வேலூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த வெளியகரம் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் பகவான் வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்றதை தாங்கிகொள்ள முடியாத மாணவ - மாணவிகள் அவரை வேறுபள்ளிக்கு செல்லவிடாமல் பாசப்போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் ஆசிரியை மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ - மாணவிகள் பாசப்போராட்டத்தில் ஈடுபட்டனர். நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த தமிழாசிரியை விஜயா அங்கிருந்து குடியாத்தம் அருகே உள்ள பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

    ஆசிரியையின் பணியிட மாற்றத்தை கைவிடக்கோரி நேற்று காலை மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8.30 மணிக்கு வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவ - மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் பெற்றோருடன் பள்ளி முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு சென்று மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மாணவ - மாணவிகள் கூறுகையில், ‘இந்த பள்ளியில் தமிழாசிரியை விஜயா கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். எங்கள் அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகுவார். நாங்கள் அதிக மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்துள்ளார். தற்போது அவர் எங்கள் பள்ளியை விட்டு சென்றது எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே தமிழாசிரியை விஜயா மீண்டும் எங்கள் பள்ளிக்கு வரவேண்டும்’ என்றனர்.

    கோரிக்கையை கடிதமாக எழுதி கொடுக்குமாறும், அதை முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். 
    ×