செய்திகள்

நீலாங்கரையில் ரூ.3 கோடி கேட்டு தொழில் அதிபர் கடத்தல்

Published On 2017-09-26 05:01 GMT   |   Update On 2017-09-26 05:01 GMT
நீலாங்கரையில் ரூ.3 கோடி கேட்டு தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூர்:

நீலாங்கரை சந்திப்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜ்குமார். தொழில் அதிபர். துரைபாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் நடத்தி வருகிறார்.

நேற்று இரவு ராஜ்குமார் வீட்டு முன்பு நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 5 பேர் அவரிடம் தாங்கள் போலீஸ் என்றும், சாதாரண உடையில் வந்திருக்கிறோம். உங்களிடம் விசாரிக்க வேண்டும். போலீஸ் நிலையம் வாருங்கள் என்று கூறினர்.

ஆனால் ராஜ்குமார் அவர்களிடம் விவரங்களை கேட்டார். அப்போது திடீரென்று அவரை 5 பேர் கும்பல் தாக்கி காரில் கடத்தி சென்றனர். கார் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கல்பாக்கம் நோக்கி சென்றது.

அப்போது ராஜ்குமாரிடம் ரூ.3 கோடி தர வேண்டும் என்று அந்த கும்பல் மிரட்டியது. ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி விலை உயர்ந்த செல்போனை பறித்துவிட்டு கல்பாக்கத்தில் காரில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்றனர்.

படுகாயம் அடைந்த நிலையில் இருந்த ராஜ்குமார் அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் செல்போன் மூலம் குடும்பத்தினருக்கு தான் கடத்தப்பட்ட தகவலை தெரிவித்தார். உடனே அவர்கள் காரில் கல்பாக்கம் சென்று ராஜ்குமாரை அழைத்து வந்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழில் அதிபர் ராஜ்குமாரை கடத்தியவர்கள் அவரது தினசரி நடவடிக்கைகளை நன்கு கவனித்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் ராஜ்குமாருக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அல்லது  ராஜ்குமாருக்கு அறிமுகமானவர்கள் யாராவது மூளையாக செயல்பட்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News