செய்திகள்

தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்: சி.பி.ராதாகிருஷ்ணன்

Published On 2017-09-18 09:42 GMT   |   Update On 2017-09-18 09:42 GMT
தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பல்லடம்:

பல்லடத்தில் பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாள் விழாவை யொட்டி பொன் காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடை பெற்றது . ஏழை குழந்தைகளுக்கு ஆயத்த ஆடைகள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் கலந்துக் கொண்ட தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஏனென்றால் நாடு முழுவதும் பிரதமர் மோடியின் திறமை மிகு ஆட்சியில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவரது பெயரை சொன்னாலே மக்கள் மிகுந்த வரவேற்பு அளிக்கிறார்கள். தமிழகத்தில் தாமரை மலரும் நாள் வந்தே தீரும்.

திராவிட இயக்கங்கள் ஒரணியில் இணைந்து திமுக தலைமையில் தேர்தலில் போட்டியிட்டாலும் அதை தேர்தல் களத்தில் நேருக்கு நேர் சந்திக்கும் ஆற்றல், திறன் பா.ஜனதாவிற்கு மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் மட்டுமே பல்வேறு அணைகள் கட்டப்பட்டது அதன் பின்பு 1967 முதல் ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் ஒரு அணையை கூட கட்டவில்லை. நாட்டை துண்டாட நினைக்கும் பிரிவினை வாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு தமிழக அரசு அடக்க வேண்டும். அ.தி.மு.க.வில் தற்போது நடைபெறுவது உட் கட்சி பிரச்சனை இதில் எந்த அணியையும் பாஜக பின்புறத்தில் இருந்து இயக்கவில்லை அவ்வாறு இயக்க வேண்டிய அவசியம் பா.ஜனதாவிற்கு இல்லை.

சமீப காலமாக நடிகர் கமலஹாசன் கொடுக்கும் அறிக்கைகள்,பேட்டிகள் மக்களிடையே நகைப்புக் குரியதாக மாறி வருகிறது மத்திய அரசின் நலத்திட்டங்கள் ஏழை,எளிய மக்களுக்கு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் .

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் சின்ன சாமி,துணைத் தலைவர் விமல் பழனிசாமி, பொதுச்செயலாளர் செந்தில் சண்முக சுந்தரம்,நகர தலைவர் வினோத், மாவட்ட இளை ஞரணி செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News