செய்திகள்

கோவை அருகே பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்திய இயற்கை விவசாயி

Published On 2017-09-17 15:05 GMT   |   Update On 2017-09-17 15:05 GMT
கோவை அருகே 19 வகை சீர்வரிசைகளுடன் பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்திய இயற்கை விவசாயி, கலந்து கொண்ட 50 பேருக்கு விருந்து கொடுத்தார்.

கோவை:

கோவை அருகே தொண்டாமுத்தூரை அடுத்த தாளி யூரை சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 38). விவசாயி. இவர் தீனம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் துர்கா என்று பெயரிட்டு அழைத்து வந்த காங்கேயம் இன பசு ஒன்று சினையாகி இருந்தது.

இதையடுத்து அந்த மாட்டுக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்ட அவர் சாமியானா பந்தல் அமைத்து வளைகாப்பு விழா நடத்தினார். அனைத்து மாடுகளையும் குளிப்பாட்டி மாட்டுப் பட்டிக்கு அழைத்து சென்றார். அங்கு துர்கா மாட்டுக்கு பொட்டு வைத்து 19 வகையான சீர்வரிசை கொண்டு வந்து மாட்டின் முன் வைக்கப்பட்டது.


பின்னர் மாட்டின் கொம்புகளில் வளையல் அணிவிக்கப்பட்டது. நான்கு கால்களிலும் கொலுசு அணிவித்து, உடம்புக்கு பட்டுத்துணி போர்த்தப்பட்டது. தொடர்ந்து மாட்டுக்கு அகத்திக்கீரை கட்டு, ½ கிலோ மைசூர் பாகு, வாழைப்பழம் ஆகியவை வழங்கப்பட்டது.

விழாவுக்கு இயற்றை விவசாயிகள் 50 பேரை அழைத்திருந்தார். அவர்களுக்கு 5 வகையான உணவுகளுடன் விருந்து அளித்தார். இது குறித்து கிஷோர் குமார் கூறியதாவது:-

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட நான் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறேன். தற்போது காங்கேயம், தஞ்சாவூர் குட்டை, கிர் இன மாடுகளை வளர்த்து வருகிறேன்.

அதில் ஒரு காங்கேயம் என பசுவுக்கு துர்கா என பெயரிட்டிருந்தோம். எனக்கு மகள் பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக தான் இந்த மாடும் பிறந்தது. இதனால் துர்காவை எங்கள் வீட்டில் ஒருவராக நினைத்து வளர்த்தோம். துர்கா சினையாகி 9 மாதம் ஆனதையடுத்து வளைகாப்பு நடத்தினோம். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News