செய்திகள்

ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் சசிகலா குடும்பத்தினர்தான்: அமைச்சர் சீனிவாசன் பேச்சு

Published On 2017-09-16 06:23 GMT   |   Update On 2017-09-16 06:23 GMT
ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் சசிகலா குடும்பத்தினர்தான் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியில் கூறியுள்ளார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால், 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அப்போது சசிகலா, அவருடைய குடும்பத்தினர் மட்டுமே பார்த்தனர். எங்களால் பார்க்க முடியவில்லை.

ஜெயலலிதா இறந்ததும், பொதுச்செயலாளராக சசிகலா இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அவருக்கு முதல்-அமைச்சர் ஆசை வந்தது.

உடனே முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்று விட்டார். சசிகலா குடும்பத்தினர் தான், ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என தமிழக மக்கள் பேசுகின்றனர். சிகிச்சைக்கான மருந்தை உலகத்தில் எங்கு இருந்தாலும் வாங்கி இருக்கலாம். ஆனால், நோய் முற்றி இயற்கையாக மரணம் அடைய வேண்டும் என விட்டுவிட்டனர். உண்மையை பேசி விடுவார் என்பதற்காக மத்திய மந்திரி அருண்ஜெட்லி, கவர்னர், ராகுல்காந்தி என பலர் வந்தும் யாரையும் பார்க்க விடவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரை நிறுத்தலாம் என யோசித்த போது, டி.டி.வி.தினகரன் தன்னை போட்டியிடும்படி சசிகலா கூறியதாக தெரிவித்தார். இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆகிவிட்டால் முதல்-அமைச்சராகி விடவேண்டும் என திட்டமிட்டார். இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், தர்மம் காப்பாற்றப்பட்டது.

பின்னர் 45 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்ததும் 2 அணிகளும் இணையவில்லை. சாட்டையை எடுக்க போகிறேன் என்றார். நாங்கள் பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கினோம். டி.டி.வி.தினகரனை பற்றி பேசவேயில்லை. ஏனெனில், அவர் கட்சியில் உறுப்பினராக கூட இல்லை. சில நாட்கள் அவருடன் இருந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

19 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளதாக கூறும் அவர், தி.மு.க.வுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார். அவரிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் பேசுகின்றனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News