செய்திகள்

காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர் வீட்டில் 140 பவுன் நகை கொள்ளை

Published On 2017-09-10 09:54 GMT   |   Update On 2017-09-10 09:54 GMT
காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர் வீட்டில் 140 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

காசிமேடு காசிமா நகர் 1-வது தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர். விசைப்படகு உரிமையாளர்.

கடந்த 8-ந்தேதி அவர் வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குடும்பத்துடன் பெரியபாளையம் கோவிலுக்கு சென்றார்.

இன்று பாஸ்கரனின் வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காசிமேடு போலீசுக்கும், பாஸ்கருக்கும் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்துவந்து பார்த்த போது வீட்டில் இருந்த 2 பீரோ உடைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்த 140 பவுன் நகை ரூ.15 லட்சம் ரொக்கம், மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளைபோய் இருந்தது.

அங்கேயே கொள்ளைக்கு பயன்படுத்திய கடப்பாரை, சுத்தியல் உள்ளிட்ட பொருட் களை மர்மநபர்கள் விட்டுச்சென்று இருந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நேற்று மதியம் பாஸ்கரின் வீட்டுக்கு அவரது உறவினர் ஒருவர் பொருட்களை எடுக்க வந்து இருந்தார். அப்போது வீட்டில் கொள்ளை நடக்க வில்லை. எனவே நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று தெரிகிறது. பாஸ்கர் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு நகை-பணத்தை கொள்ளையர்கள் திருடி உள்ளனர்.

கொள்ளை நடந்தது குறித்து பாஸ்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் சென்னை வந்து கொண்டு இருக்கிறார். அவர் வந்த பின்னரே கொள்ளை போன பொருட்களை பற்றிய விபரம் முழுமையாக தெரியவரும்.

இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

Tags:    

Similar News