செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியை ராஜினாமா

Published On 2017-09-07 08:34 GMT   |   Update On 2017-09-07 09:09 GMT
திண்டிவனம் அருகே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியை இன்று தனது ராஜினாமா கடிதத்தை கல்வி அதிகாரியிடம் கொடுத்தார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயகாந்தன். இவருடைய மனைவி சபரிமாலா(வயது 35). இவர்களது மகன் ஜெயசோழன்(7).

சபரிமாலா ஒலக்கூர் ஒன்றியம் வைரபுரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஜெயசோழன் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று சபரிமாலா தனது மகனுடன் வைரபுரத்தில் உள்ள பள்ளிக்கு வந்தார். பள்ளி வளாகத்தில் அவர் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகையை வைத்திருந்தார்.



அவருடன் அவரது மகன் ஜெயசோழனும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டான்.

தகவல் அறிந்த ரோசணை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறினர். இதனை ஏற்ற ஆசிரியை போராட்டத்தை கைவிட்டார். முறைப்படி அனுமதி வாங்கி மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆசிரியை சபரிமாலா பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். இன்று காலை 11.40 மணியளவில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலகம் வந்தார்.

பின்னர் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அங்கிருந்த கல்வி அதிகாரியிடம் கொடுத்தார்.

Tags:    

Similar News