செய்திகள்

அ.தி.மு.க. - பா.ஜனதா இணைந்து விட்டதுபோல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது: தங்கத்தமிழ்செல்வன் பேட்டி

Published On 2017-08-28 05:37 GMT   |   Update On 2017-08-28 05:37 GMT
அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இணைந்து விட்டதுபோல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளதாக புதுவையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்செல்வன் கூறி உள்ளார்.
புதுச்சேரி:

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் புதுவை சின்னவீராம் பட்டினத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளனர். இவர்களில் தங்கத்தமிழ்ச்செல்வன் 2 நாட்களாக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு இன்று காலை ஓட்டலுக்கு திரும்பினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது எங்களிடம் 21 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், தொடர்ந்து பல எம்.எல்.ஏ.க்களும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். இன்னும் 25 பேர் எங்களை ஆதரிக்க முன்வந்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர்கள் இங்கு வருவார்கள்.

இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு எந்த அழைப்பும் இல்லை. நாங்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இல்லையா? அவர்கள் அதிகார மமதையில் இருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரம் என்பது இன்னும் 3 ஆண்டுகளுக்குத் தான் இருக்கும். ஆனால் கட்சி எப்போதும் இருக்கும். கட்சியை காப்பாற்றுவதற்கு தான் தொகுதி மக்களை மறந்து, சொந்த பந்தங்களை மறந்து புதுவையில் வந்து தங்கி இருக்கிறோம்.

எங்களை கவர்னர் நிச்சயம் அழைப்பார் என்று 100 சதவீதம் நம்புகிறோம். அப்படி கவர்னர் அழைக்காவிட்டால் ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.

மத்திய அரசு என்பது மாநில அரசுகளுக்கு உதவும் பணியை செய்யும். ஆனால் இப்போதுள்ள மத்திய அரசு உள்கட்சி விவகாரத்தில் தலையிட்டு வருகிறது. அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இணைந்து விட்டதுபோல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் சொல்படி இவர்கள் செயல்படுகிறார்கள்.



இந்த அரசை ஊழல் ஆட்சி என்றும், தர்மயுத்தம் நடத்தப்போகிறேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கிடைத்ததும் தர்ம யுத்தம் முடிந்துவிட்டது.



பன்னீர்செல்வம் ஏற்கனவே பல பதவிகளில் அமர்ந்துவிட்டார். அவர் நினைந்திருந்தால் துணை முதல்-அமைச்சர் பதவியை வேறு ஒருவருக்கு பெற்றுக் கொடுத்திருக்கலாம். தனக்கு பதவி வேண்டும் என்பதில் மட்டும்தான் குறியாக இருந்துள்ளார். அவருக்கு தொண்டர்களோ, கட்சியோ முக்கியமில்லை. தங்களுக்கு பதவி வேண்டும் என்பது தான் முக்கியம்.



எடப்பாடி பழனிச்சாமியை முதல்-அமைச்சராக்கியது செல்லாது என்று மாபா பாண்டியராஜன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே அவர் அந்த அமைச்சரவையில் சேர்ந்து அமைச்சர் பதவி வாங்கி இருக்கிறார். இவர்கள் எதிலும் சட்டப்படி நடப்பது இல்லை.

இவ்வாறு தங்கத்தமிழ்ச்செல்வன் கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள வின்ட்பிளவர் ஓட்டல் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News