செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி

மணப்பாறை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து மாணவர் மூளை சிதறி பலி

Published On 2017-08-23 04:48 GMT   |   Update On 2017-08-23 04:48 GMT
மணப்பாறை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் மாணவர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பாலக்குறிச்சியை சேர்ந்தவர் சவரிமுத்து. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது திருச்சியில் உள்ள ஒரு வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி டெய்சி ராணி. இவர் பாலக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் கெவின் மார்க் (வயது 15). கைகாட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சவரிமுத்து அனுமதி பெற்று வீட்டில் துப்பாக்கி வைத்திருந்தார்.

இந்நிலையில் ஒலியமங்கலத்தில் உள்ள டெய்சிராணியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை பார்ப்பதற்காக நேற்று கெவின் மார்க்கின் பெற்றோர் சென்று விட்டனர். பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி வந்த அவர் வீட்டில் தனியாக இருந்தார்.

இரவு 7.30 மணி அளவில் அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அப்போது கெவின் மார்க் வீட்டில் இருந்து துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு சென்று பார்த்த போது, கெவின் மார்க் தலையில் குண்டு பாய்ந்து மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இதுகுறித்து சவரி முத்து-டெய்சி ராணிக்கு தகவல் கொடுத்தனர். வீட்டிற்கு அலறியடித்துக்கொண்டு வந்த அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி, துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் அப்துல்கபூர் மற்றும் வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கெவின் மார்க்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கியையும் அவர்கள் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த கெவின் மார்க், பெற்றோர் இல்லாததையடுத்து வீட்டில் இருந்த துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பி அதனை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது மின்தடை ஏற்படவே எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் கெவின் மார்க் மூளை சிதறி பலியானது தெரியவந்தது.

கெவின் மார்க் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றிருந்ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாமா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனாக இருந்த போதிலும் கெவின் மார்க் காரை மிகவும் லாவகமாக ஓட்டும் திறமை படைத்தவராம். விளையாட்டுக்களிலும் சாதனை படைத்து வந்துள்ளார். அவர் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News