செய்திகள்

திருத்தணி அருகே கலப்பு திருமணத்தால் வாலிபர் அடித்து கொலை: 6 பேர் கைது

Published On 2017-08-13 12:08 GMT   |   Update On 2017-08-13 12:08 GMT
திருத்தணி அருகே கலப்பு திருமணத்தால் 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
பள்ளிப்பட்டு:

திருத்தணியை அடுத்த திருக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). சோளிங்கரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அதே கிராமத்தில் வசிக்கும் வாலிபரை காதலித்து கலப்பு திருமணம் செய்து உள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இரும்பு கம்பி, கம்பு மற்றும் கல்லால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் ரமேஷ், குமரேசன் உள்பட பலர் காயம் அடைந்தனர். தலையில் படுகாயம் அடைந்த ரமேசுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருத்தணி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், அண்ணாமலை, நவீன், வனிதா, ராணி மற்றும் சந்திரசேகர் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

காயம் அடைந்த குமரேசனுக்கு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

மோதலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News