செய்திகள்

கண்மாயை தூர்வாராததால் ஆத்திரம்: எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் காரை கிராமத்தினர் முற்றுகை

Published On 2017-07-25 10:14 GMT   |   Update On 2017-07-25 10:16 GMT
கண்மாயை தூர்வாராததால் தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. காரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூரில் பரமசிவன் கோவில் கண்மாய் உள்ளது. இக்கண்மாயை தூர்வார வலியுறுத்தி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., எம்.பி. வரை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் கிராம மக்கள் தங்கள் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்கதமிழ்ச்செல்வன் கண்மாயை பார்வையிட கண்டமனூர் வந்தார். கருப்பசாமி கோவில் அருகில் அவருடைய காரை கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் வழிமறித்தனர். இத்தனை நாட்கள் வராத நீங்கள், நாங்கள் கண்மாயை தூர்வாரும்போது ஏன் வருகிறீர்கள் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த டி.எஸ்.பி. குலாம் தலைமையிலான போலீசார் பொது மக்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் பொதுமக்கள் அமையதியாகவில்லை. இதனால் வேறுவழியின்றி தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. திரும்பிச் சென்றார்.

கண்டமனூரை சேர்ந்த அங்குசாமி கூறுகையில், கண்மாயை தூர்வார வேண்டும் என 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.

தற்போது நாங்கள் தூர்வாரும்போது விளம்பரம் தேடும் நோக்கத்தோடு எம்.எல்.ஏ. வந்துள்ளார். அதனால் எதிர்ப்பு தெரிவித்தோம் என்றார்.
Tags:    

Similar News