செய்திகள்

வன்கொடுமையில் தமிழகம் 5-வது இடம்: கோவையில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் வேதனை

Published On 2017-06-26 09:06 GMT   |   Update On 2017-06-26 09:06 GMT
வன்கொடுமையில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது வேதனை அளிக்கிறது என்று கோவையில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறினார்.
கோவை:

தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட விதிமுறைகள், அரசின் நிதி உதவிகள் வழங்குதல் குறித்த கருத்தரங்கம் இன்று கோவையில் நடைபெற்றது.

தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் விதிமுறைகள் பற்றி விளக்கி கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்திய அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளதுபோல் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள், சமூக, பொருளாதார உதவிகள் முறையாக கிடைக்கப்பெறுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து அதி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்.

பலரிடம் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்டோர்களுக்கு வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வன்கொடுமையில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது வேதனை அளிக்கிறது. அதே சமயம் போதிய விழிப்புணர்வு உள்ளதால் டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இருந்துதான் அதிக புகார்கள் வருவது ஆறுதல் அளிக்கிறது.



கடந்த மாதம் 3 மாவட்டங்களில் நடத்தப்பட்ட கலந்தாய்வில் வன்கொடுமை வழக்குகளுக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது. 95 சதவீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கலப்பு திருமணம் புரிந்தோருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தற்போது முடங்கியுள்ளது. ஆணையம் சார்பில் நடைபெறும் மாநில கூட்டத்தில் இது தொடர்பாக எடுத்துரைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News