செய்திகள்

4 குழந்தைகளை பராமரிக்க முடியாமல் தவிப்பு: படுகொலை செய்யப்பட்ட காவலாளி மனைவி பேட்டி

Published On 2017-06-25 16:12 GMT   |   Update On 2017-06-25 16:12 GMT
4 குழந்தைகளை பராமரிக்க முடியாமல் தவிப்பதால் கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று படுகொலை செய்யப்பட்ட காவலாளி மனைவி கேட்டுக்கொண்டார்.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது கொடநாடு. இங்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது.

இந்த எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24-ந்தேதி கொள்ளை நடந்தது. அப்போது அங்கு காவல் பணியில் இருந்த ஓம்பகதூர் (வயது 52) என்பவரை 11 பேர் கொண்ட கும்பல் கொன்றது.

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது.கொள்ளையில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார்.

இந்த நிலையில் கொலையான காவலாளி ஓம்பகதூரின் மனைவி ஹிம்கலிதபா (45) என்பவர் கணவரின் பி.எப். பணத்திற்காக கையெழுத்துபோட கொடநாடு வந்தார்.

இவர் நேபாள நாடு பிம்போகாரா அருகே உள்ள சலாம் கிராமத்தை சேர்ந்தவர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது கணவர் ஓம்பகதூர் கடந்த 13 ஆண்டுகளாக கொடநாடு எஸ்டேட்டில் தான் வேலை செய்து வந்தார். எங்களுக்கு யசோதா (21), குமாரி (15), ஹிரா (8) ஆகிய 3 மகள்களும், ரமேஷ் (12) என்ற மகனும் உள்ளான். கணவர் அனுப்பிய பணத்தை வைத்தே குடும்பம் நடத்தி வந்தேன்.

அவர் இறந்த பின்னர் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வருகிறேன். எனவே கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் எனது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News