செய்திகள்

கொத்தவால்சாவடி தொழில் அதிபர் வீட்டில் ரூ.24 லட்சம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

Published On 2017-06-25 11:29 GMT   |   Update On 2017-06-25 11:29 GMT
கொத்தவால்சாவடி தொழில் அதிபர் வீட்டில் ரூ.24 லட்சம் கொள்ளை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

கொத்தவால்சாவடி, முத்தையா தெருவில் வசித்து வருபவர் தினேஷ் தொழில் அதிபர். பாரிமுனையில் அழகு சாதன பொருட்கள் மொத்த விற்பனை கடை வைத்துள்ளார்.

கடந்த 16-ந்தேதி இவரது வீட்டுக்குள் பூட்டை உடைத்து புகுந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த ரூ.24 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து உதவி கமி‌ஷனர் ஆனந்தகுமார் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ஜூலியட்சீசர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். தினேசின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது.

இதனை வைத்து அதே பகுதியை சேர்ந்த அர்ஜுனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி கொள்ளையில் ஈடுபட்டது தினேசின் கடையில் ஊழியராக வேலை பார்த்த சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் பரத், சீமாராம் என்பது தெரிந்தது.

அவர்கள் 3 பேரும் பணத்துடன் ராஜஸ்தானுக்கு தப்பி சென்று இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தானுக்கு விரைந்தனர்.

அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சுரேஷ், பரத், சீமாராம் ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொழில் அதிபர் தினேஷ் வீட்டில் அதிக அளவு பணம் இருப்பதை நோட்டமிட்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதாக ஊழியர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.

கைதான 3 பேரையும் தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொள்ளை தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News