செய்திகள்

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பெண் பலி

Published On 2017-06-17 17:14 GMT   |   Update On 2017-06-17 17:14 GMT
கிருஷ்ணகிரி அருகே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நாடுவானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன். விவசாயி. இவரது மனைவி சாவித்திரி (வயது 32). இவர்களுக்கு ஏற்கனவே 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த சாவித்திரிக்கு சில நாட்களுக்கு முன்பு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று முன்தினம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள சாவித்திரி வேப்பனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாகவும், அப்போது சாவித்திரியின் உடல் நிலை மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரை கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் சாவித்திரி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில் நேற்று நாடுவானப்பள்ளி கிராமத்தில் அவருடைய பிணத்தை சாலையின் நடுவே வைத்து, ‘‘சாவித்திரி, டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தான் உயிரிழந்துள்ளார். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ எனக்கூறி அவருடைய உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாசில்தார் மோகனசுந்தரம் மற்றும் வேப்பனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாவித்திரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Tags:    

Similar News