செய்திகள்

தாய்மார்கள் உடல்நலத்துடன் வாழவே இலவச சமையல் எரிவாயு திட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2017-06-11 12:47 GMT   |   Update On 2017-06-11 12:51 GMT
விழாவில் கலந்து கொண்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

காரைக்கால்:

காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விழா நடை பெற்றது.

விழாவில் கலந்து கொண்டு மோடி அரசில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கி பேசினார்.

கடந்த 3 ஆண்டுகளில் என்ன செய்துள்ளோம்? என்பதை துணிச்சலுடன் சொல்ல ஒரு அரசு முன் வந்து இருக்கிறது என்றால் அது பா.ஜனதா அரசாகத்தான் இருக்கும். அது போன்று மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. கடந்த 60 ஆண்டுகளில் தமிழகம் மற்றும் புதுவையில் என்ன செய்து இருக்கிறது? என்பதை துணிச்சலுடன் சொல்ல முன்வந்துள்ளது.

பிரதமர் மோடியால் அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் கொண்டு வரப்பட்டது. நாட்டிலேயே அனைவருக்கும் வங்கிக் கணக்கு உள்ள ஒரே மாநிலமாக புதுவை விளங்குகிறது. இதற்காக இந்த மாநில மக்களுக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டில் உள்ள சுமார் 5 கோடி ஏழை எளிய மக்களுக்கு ரூ.1600 மதிப்புள்ள இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

புகையை சுவாசிக்கும் தாய்மார்கள் நுரையீரல் பாதிப்பால் அவதிப்படுவதை உணர்ந்த பிரதமர் மோடி தாய்மார்கள் நல்ல உடல் நலத்துடன் விளங்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த இலவச சமையல் எரிவாயு திட்டத்தை கொண்டு வந்தார்.

பாமர மக்களும் தொடங்கி சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக முத்ரா கடனுதவி திட்டத்தை கொண்டு வந்தார். இது போன்று ஏராளமான திட்டங்களை அவர் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News