செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

ஆறுமுகநேரியில் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2017-05-29 11:50 GMT   |   Update On 2017-05-29 11:50 GMT
ஆறுமுகநேரியில் தொழிற்சாலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே உள்ளது எஸ்.ஆர்.எஸ். கார்டன் பகுதி. இங்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வசித்து வருகிறார்கள். சில வியாபாரிகளும் இங்கு குடியிருக்கின்றனர். இங்குள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசங்கர்(வயது45). இவர் சாகுபுரம் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

இவர் சம்பவத்தன்று தனது மனைவி நித்யகல்யாணி மற்றும் குடும்பத்தாருடன் வீட்டை பூட்டிவிட்டு அம்பை கோவில் விழாவுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் பீரோவை உடைத்து நகை, பணம் உள்ளதா? என்று பார்த்துள்ளனர்.

நகைகள் எதுவும் சிக்காததால் அங்கிருந்த பணத்தை மட்டும் எடுத்து சென்றுவிட்டனர். காலையில் வீட்டுக்கு வந்த முத்துசங்கர் வீட்டில் கதவு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஆறுமுகநேரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எஸ்.ஆர்.எஸ். கார்டன் பகுதியில் சமீபகாலமாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

ஏற்கனவே இப்பகுதியில் கோபாலன், சந்துரு பட்டர், ஆழ்வாரப்பன் ஆகியோர் வீடுகளில் கதவை உடைத்து பணம், நகையை திருடி சென்றனர். இந்த திருட்டுகள் பற்றி போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்களால் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பதட்டமும் ஏற்படாது.

இதையடுத்து தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க கோரி பொதுமக்கள் ஆறுமுகநேரி காயல்பட்டினம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதித்தது. சுமார் 30 நிமிடங்கள் மறியல் நீடித்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

இதன்பிறகு போலீசார் திருட்டு நடந்த முத்துசங்கர் வீட்டுக்கு சென்று ஆய்வு நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.ஆர்.எஸ் நகர் பகுதியில் ஏற்கனவே குடியிருப்போர் நல சங்கம் சார்பில் 2 காவலாளிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனினும் தொடர்ந்து திருட்டுகள் நடப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
Tags:    

Similar News