செய்திகள்

ஏற்காட்டில், இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

Published On 2017-05-28 06:06 GMT   |   Update On 2017-05-28 06:06 GMT
ஏற்காட்டில், 2-வது நாளான இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் மலர் கண்காட்சி அமைந்துள்ள அண்ணா பூங்காவில் அலை மோதியது.
ஏற்காடு:

42-வது ஏற்காடு கோடைவிழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்டங்களை வழங்கினார். 2-வது நாளான இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் மலர் கண்காட்சி அமைந்துள்ள அண்ணா பூங்காவில் அலை மோதியது.

அவர்கள் அங்கு கார்னேசன் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள நடனமாடும் மங்கை, பாண்டா கரடி, கிங்காங் மற்றும் கழுகு பொம்மைகளுக்கு முன்பு நின்று செல்பி எடுத்து கொண்டனர்.

மேலும் அங்கு அமைந்துள்ள பல வண்ண மலர்களை குடும்பத்துடன் ரசித்தனர். மேலும் செயற்கை நீரூற்றின் நீரில் நனைந்தும் மகிழ்ந்தனர். விழா திடலில் அமைந்துள்ள அனைத்து துறை செயல் விளக்க ஸ்டால்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

குறிப்பாக இந்த ஆண்டு மத்திய அரசு திட்டங்களை தெரிவிக்கும் விதமாக இந்திய தபால் துறை மூலம் அமைக்கப்பட்ட ஸ்டால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

இதனால் இப்படிப்பட்ட கோடை விழா நாட்களில் படகுகளை அதிகமாக இயக்க கோரிக்கை விடுத்தனர். மான் பூங்கா, மீன் காட்சியகம், ஏரி பூங்கா போன்ற இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்காடு மலை பாதை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது.

மேலும் சாலை விபத்துகளை தடுக்க மலை பாதை வளைவுகளில் போக்குவரத்து காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து கழகம் சார்பில் 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விழா திடலை தூய்மையாக வைத்துக்கொள்ள ஏற்காடு ஊராட்சி பணியாளர்களுடன், சேலம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். 2-ம் நாளான இன்று கால்நடை துறை சார்பில் நாய் கண்காட்சி, சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி, பள்ளி கல்வி துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள், ஊராட்சி ஒன்றிய குத்தகைதாரர் முருகன் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி, விளையாட்டுத்துறை சார்பில் விளையாட்டு போட்டி ஆகியவை நடைபெற்றது.
Tags:    

Similar News