செய்திகள்

கொடநாடு வழக்கில் போலீஸ் நெருங்கியதால் மனைவி- மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற சயன்

Published On 2017-04-30 05:04 GMT   |   Update On 2017-04-30 05:04 GMT
கொடநாடு கொலை வழக்கில் போலீஸ் நெருங்கியதால் தனது மனைவி மற்றும் மகளை கொன்று தற்கொலைக்கு சயன் முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை:

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் போலீசார் நடத்திய புலன் விசாரணையில் 11 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் கொடநாடு பகுதியில் கண்காணிப்பு காமிராவில் பதிவான வாகனத்தின் எண்களை வைத்து போலீசார் விசாரித்தனர்.

இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த கனகராஜ், அவரது நண்பர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சயன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

இதனால் கனகராஜ், சயன் ஆகியோரை பிடிக்க தனிப்படை போலீசார் திட்டம் வகுத்து வந்தனர்.

இந்த நிலையில் கனகராஜ். நேற்று முன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் போது விபத்தில் சிக்கி பலியானார்.

இதற்கிடையே சயன், கோவையில் இருந்து கேரளாவுக்கு மனைவி வினுபிரியா, மகள் நீனு ஆகியோருடன் காரில் தப்பி சென்றார். நேற்று அதிகாலை 6.30 மணியளவில் திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணடி என்ற இடத்தில் சென்ற போது கண்டெய்னர் லாரியில் கார் மோதியது. இதில் வினுபிரியா, நீனு ஆகியோர் பலியாகினர்.

படுகாயத்துடன் சயன் மீட்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே விபத்தில் பலியான வினுபிரியா, நீனு ஆகியோரின் பிரேத பரிசோதனை பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது.

இதில் வினுபிரியா, நீனு ஆகியோரின் கழுத்தில் வெட்டு காயம் இருந்தது. மேலும் விபத்து நடப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே 2 பேரும் இறந்தது தெரிய வந்துள்ளது.

இதனால் மனைவி, மகளை கொன்று விட்டு தற்கொலை செய்யும் நோக்கில் கண்டெய்னர் லாரியில் காரை சயன் மோத செய்துள்ளார் என்று போலீசார் கருதுகின்றனர்.

இதையடுத்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சயனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனால் கொடநாடு கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. 
Tags:    

Similar News