செய்திகள்

திருப்பூரில் போலி டாக்டர் கைது: மற்றொருவர் தப்பி ஓட்டம்

Published On 2016-10-28 11:31 GMT   |   Update On 2016-10-28 11:32 GMT
திருப்பூரில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவர் தப்பி விட்டார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் போலி கிளினிக் செயல்படுவதாக கலெக்டர் ஜெயந்திக்கு புகார் கிடைத்தது. இதனையடுத்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயகுமாருக்கு அவர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் ஊத்துக்குளிக்கு சென்று குறிப்பிட்ட கிளினிக்கை சோதனை நடத்தினார்.

கிளினிக்கை ஸ்வரூப் என்பவர் நடத்தி வந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் டி.பார்ம் படித்திருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் எழுதி தரும் மருந்துகளை நோயாளிகளுக்கு எடுத்து தர மட்டுமே அவர் படித்துள்ளார். ஆனால் அவர் எம்.பி.பி.எஸ்.படிக்காமல் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

மருந்து, மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கிளினிக்கை பூட்டினர். பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைத்தனர்.

போலி டாக்டர் பிடிபட்ட நிலையில் அதே பகுதியில் மற்றொரு போலி டாக்டர் தனது கிளினிக்கை மூடிவிட்டு தப்பி விட்டார்.

இது குறித்து சுகாதார பணிகள் இணை இயக்குனர் விஜயகுமார் கூறும்போது, ஊத்துக்குளியில் போலி கிளினிக் நடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினோம்.

அங்கு ஸ்வரூப் என்பவர் உயிர் காக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளித்துள்ளார். அவரது கிளினிக்கில் இருந்த மருந்துகளை கைப்பற்றி மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்.

அதிகாரிகள் சான்றிதழ் கொடுத்த பின்னர் போலி கிளினிக் நடத்திய ஸ்வரூப் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதே பகுதியில் மேலும் ஒரு போலி டாக்டர் தப்பி ஓடி விட்டார். அவரை பிடித்து அவரது கிளினிக்கையும் சோதனை நடத்த உள்ளோம். இது தவிர தாராபுரம், குண்டடம் பகுதிகளில் போலி டாக்டர்கள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்த உள்ளோம். சோதனையில் ஏராளமான போலி டாக்டர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

போலி டாக்டர் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News