செய்திகள்
நடுக்கடல் நின்ற கடற்படை கப்பலை படத்தில் காணலாம்

குளச்சல் பகுதியில் 3 நாட்களாக நடுக்கடலில் நின்ற கடற்படைகப்பல் புறப்பட்டு சென்றது

Published On 2016-10-24 06:19 GMT   |   Update On 2016-10-24 06:19 GMT
குளச்சல் பகுதியில் 3 நாட்களுக்கு பிறகு அந்த கப்பல் குளச்சல் கடல் பகுதியில் இருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்டுச் சென்றது.

குளச்சல்:

குளச்சல் அருகே உள்ளது வாணியக்குடி மீனவர் கிராமம். இந்த கடற்கரையில் இருந்து 6 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய கப்பல் நின்றுகொண்டிருந்தது.

கடற்கரையில் இருந்து பார்க்கும்போது இந்த கப்பல் கடலில் நிற்பது நன்றாக தெரிந்ததால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடற்கரையில் திரண்டு கப்பலை பார்த்தனர்.

குளச்சல் சர்வதேச கடல் வழி பாதையாக இருப்பதால் இந்த கடல் வழியாக அடிக்கடி பெரிய கப்பல்கள் சென்று வருவது வழக்கம். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் இந்த காட்சியை அடிக்கடி பார்ப்பதால் பெரிய கப்பல்கள் செல்வது பரபரப்பை ஏற்படுத்துவது இல்லை.

ஆனால் இந்த கப்பல் கடந்த 2 நாட்களாக ஒரே இடத்தில் நின்றதால் பொது மக்களிடம் அந்த கப்பல் பற்றிய பரபரப்பு ஏற்பட்டது.

குளச்சல் கடலில் மர்ம கப்பல் நிற்கும் தகவல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் கப்பல் எதையும் நிறுத்த அனுமதி வழங்கப்பட வில்லை என்பது தெரிய வந்தது. மேலும் அந்த கப்பல் இந்திய கடற்படைக்கு சொந்தமானது என்பதும் அதில் ரேடார் உள்பட அதிநவீன கண்காணிப்பு சாதனங்கள் இருப்பதும் தெரிய வந்தது.

அந்த கப்பல் தொடர்ந்து அங்கேயே நின்றதால் அந்த கப்பல் பற்றி பல்வேறு பரபரப்புகள் நிலவி வந்தது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு அந்த கப்பல் குளச்சல் கடல் பகுதியில் இருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்டுச் சென்றது.

அந்த கப்பல் குளச்சல் கடல் பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி பொதுமக்கள் தெளிவுபெற மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News