செய்திகள்

நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி 2-வது நாளாக வாக்கு சேகரிப்பு

Published On 2016-10-22 09:10 GMT   |   Update On 2016-10-22 09:10 GMT
நெல்லித்தோப்பு தொகுதியில் இன்று 2-வது நாளாக நாராயணசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுச்சேரி:

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அவர், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். பிள்ளைத் தோட்டத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் நாராயணசாமி இன்று 2-வது நாளாக வாக்கு சேகரித்தார். நவீனா கார்டன் பகுதியில் வாக்கு சேகரிப்பை தொடங்கிய நாராயணசாமி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமாருடன் வீடு, வீடாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவருக்கு வீடுதோறும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும், மலர் தூவியும் வரவேற்றனர். அவருடன் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

இதே போல் நாராயணசாமியை ஆதரித்து ஜெயமூர்த்தி, அனந்தராமன் ஆகியோர் ஒரு பகுதியிலும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, கீதா ஆனந்தன் ஆகியோரும், காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், செந்தில்குமரன் ஆகியோரும் தனித்தனியே வீடு, வீடாக சென்று காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்கு சேகரித்தனர்.

அப்போது அவர்கள் காங்கிரஸ் அரசின் 5 மாத சாதனைகளையும், செயல்படுத்தப்பட்ட திட்டங் களையும் பொது மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வாக்கு சேகரிக்க சென்ற அவர்களுக்கும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Similar News