செய்திகள்
அம்பதி ராயுடு

ராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...

Published On 2019-08-24 04:01 GMT   |   Update On 2019-08-24 04:01 GMT
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அம்பதி ராயுடு மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதாக கூறியுள்ளார்.
சென்னை:

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வந்தவர் அம்பதி ராயுடு. சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தமிழக விஜய்சங்கரை அணியில் சேர்த்தபோது அதிருப்தி தெரிவித்தார். எனினும், அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார்.

உலக கோப்பை தொடரின்போது ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் இருவரும் காயம் காரணமாக விலகிவிட்டனர். மாற்று வீரர்களை தேர்வு செய்யும்போது ராயுடுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அம்பதி ராயுடு கடும் அதிருப்தி அடைந்தார்.



இதன் விளைவாக ஐபிஎல் உள்பட அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அம்பதி ராயுடு அறிவித்தார். இதனை பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஒரு நாள் தொடரில் கலந்துக் கொள்ள தமிழ்நாடு வந்த அம்பதி ராயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘உலக கோப்பையில் கலந்துக் கொள்ள 4 ஆண்டுகளாக கடுமையாக  உழைத்தேன். அதில் தேர்வாகவில்லை என்ற ஏமாற்றத்தினாலேயே ஓய்வு பெறுவதாக முடிவெடுத்தேன்.

உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு இல்லை. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒன்று, கிடைக்கவில்லை. எனவே, அடுத்தகட்டம் நோக்கி நகர்வதுதான் சரி என நினைத்து அப்படி முடிவு எடுத்துவிட்டேன்.

இப்போது அதுபற்றி யோசிக்க நேரம் கிடைத்துள்ளது. இந்த முடிவு குறித்து பிசிசிஐக்கு கடிதம் எழுத உள்ளேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிச்சயம் விளையாடுவேன். அதற்கு முன் என் உடல் தகுதியை இன்னும் அதிகரிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளேன்.

இந்திய அணியில் விளையாடுவது குறித்து தற்போது யோசிக்கவில்லை. ஆனால், நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் கலந்துக் கொள்வேன்’ என கூறினார்.

Tags:    

Similar News