செய்திகள்
நிலைதடுமாறி கீழே விழுந்த ஸ்டீவன் ஸ்மித்

ஆஷஸ் 2வது டெஸ்டில் ஸ்மித் பொறுப்பான ஆட்டம் - ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 250 ரன்னில் ஆல் அவுட்

Published On 2019-08-18 02:22 GMT   |   Update On 2019-08-18 02:41 GMT
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஸ்டீவன் ஸ்மித்தை பவுன்சர் பந்து தாக்கி கீழே விழுந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
லண்டன்:

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்த இங்கிலாந்து ரோரி பர்ன்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரின் அரை சதத்தால் 258 ரன்னில் ஆட்டமிழந்தது.

அதன்பின், தனது முதல் இன்னிங்சை தொடங்கியது ஆஸ்திரேலியா. முதலில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் ஓரளவு தாக்குப்பிடித்தார்.



இங்கிலாந்து பவுலர்கள் குறிப்பாக, அறிமுக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அதிவேகமாக பந்து வீசி சரமாரி தாக்குதல் தொடுத்தார். அவர் வீசிய பந்து சுமித்தின் முழங்கையை பதம் பார்த்தது. பிறகு அதற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு தொடர்ந்து விளையாடினார்.

நேர்த்தியாக ஆடிய சுமித்துக்கு, ஜோப்ரா ஆர்ச்சர் இடைவிடாது குடைச்சல் கொடுத்தார். அவர் மணிக்கு 92.4 மைல் வேகத்தில் வீசிய ஒரு பவுன்சர் பந்து சுமித்தை பயங்கரமாக தாக்கியது. அதாவது அந்த பந்தை தவிர்ப்பதற்காக சுமித் தலையை உள்பக்கமாக இழுப்பதற்குள் இடது காதுக்கு கீழே கழுத்தில் பந்து தாக்கி விட்டது. இதில் நிலைகுலைந்து போன ஸ்டீவன் சுமித் மைதானத்தில் சரிந்தார். இப்படிப்பட்ட சீற்றத்துடன் வந்த ஒரு பந்து தான் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்சின் உயிரை குடித்தது. அதை நினைவுபடுத்தும் வகையில் இந்த பவுன்சர் தாக்குதல் அமைந்ததால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர் உடனடியாக களத்திற்கு வந்து சிகிச்சை அளித்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஆபத்தும் ஏதும் இல்லை.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தினார். இறுதியில், 92 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 94.3 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 8 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடியது. 4-ம்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 31 ஓவர் முடிந்திருந்த போது 4 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ஜாசன் ராய் (2 ரன்), கேப்டன் ஜோ ரூட் (0) ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
Tags:    

Similar News