செய்திகள்

கூடைப்பந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு- 4 பேர் காயம்

Published On 2019-06-18 10:15 GMT   |   Update On 2019-06-18 10:15 GMT
கனடாவின் டொரன்டோ நகரில் கூடைப்பந்து விளையாட்டு வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடந்த பேரணியில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
டொரன்டோ:

கனடாவின் டொரன்டோ நகரைச் சேர்ந்த கூடைப்பந்து அணி, என்பிஏ சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் டொரன்டோ நகரில் எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் அணிவகுத்து சென்றனர்.

இந்நிலையில், நாதன் பிலிப்ஸ் சதுக்கம் அருகே உள்ள பே அண்ட் ஆல்பர்ட் தெருக்களில் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது இரண்டு தெருக்களிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், 4 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது, அருகில் உள்ள நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் கூடைப்பந்து அணிக்கு நடந்த பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் டூரூடோ கலந்துகொண்டார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் சிறிது நேரம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News