செய்திகள்

சவுமியா சர்கார், மெஹ்முதுல்லா சதம் வீண்: முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது நியூசிலாந்து

Published On 2019-03-03 07:54 GMT   |   Update On 2019-03-03 07:54 GMT
சதமடித்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வங்காளதேச பேட்ஸ்மேன்கள் சவுமியா சர்கார், மெஹ்முதுல்லா போராடியும், நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. #NZvBAN
ஹாமில்டன்:

நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 234 ரன்னில் ஆல்அவுட் ஆகியது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 126 ரன்கள் அடித்த போதிலும் மற்ற வீரர்கள் சொதப்பினார்கள். நியூசிலாந்து அணி சார்பில் வாக்னர் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. கேன் வில்லியசனின் இரட்டை சதம், ஜீத் ராவல் (132) மற்றும் டாம் லாதம் (161) ஆகியோரின் சதங்களால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 715 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

481 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காள தேசம் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து இருந்தது.

இன்று 4-து நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 429 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்னில் அபார வெற்றி பெற்றது.



அந்த அணியின் சவுமியா சர்கார் (149 ரன்), கேப்டன் மெஹ்முதுல்லா (146 ரன்) சதம் அடித்தனர். இருவரும் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடியது பலன் இல்லாமல் போனது. போல்ட் 5 விக்கெட்டும், டிம் சவுத்தி 3 விக்கெட்டும், வாக்னர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட் வருகிற 8-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.
Tags:    

Similar News