செய்திகள்

மெல்போர்ன் டெஸ்டில் இந்திய தொடக்க ஜோடி மாற்றப்படுமா?: ரவி சாஸ்திரி பேட்டி

Published On 2018-12-23 07:20 GMT   |   Update On 2018-12-23 07:20 GMT
மெல்போர்னில் நடைபெற இருக்கும் பாக்சிங் டெஸ்டில் இந்திய தொடக்க ஜோடி மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு ரவி சாஸ்திரி பதில் அளித்துள்ளார். #AUSvIND
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக முரளி விஜய், லோகேஷ் ராகுல் களம் இறங்கினார்கள். ஆனால் அவர்கள் சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை. இதில் லோகேஷ் ராகுலின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இந்திய தொடக்க ஜோடியை மாற்ற வேண்டும் என்று பல தரப்பினர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் கூறும்போது, லோகேஷ் ராகுலை நீக்கி விட்டு விஹாரியை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று தெரிவித்தார். சிலர் முரளி விஜயை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் காயம் காரணமாக விலகிய பிரித்வி ஷாவிற்குப் பதில் அணியில் சேர்க்கப்பட்டுள்ள புதுமுக வீரர் மயாங்க் அகர்வாலும் தொடக்க வீரர் போட்டியில் உள்ளார். பாக்சிங் டே டெஸ்டில் மயாங்க் அகர்வால் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

இதற்கிடையே இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இந்திய தொடக்க ஜோடி ரன் குவிக்க சிரமப்பட்டு வருவதில் மிகவும் அக்கறை செலுத்த வேண்டும். டாப்ஆர்டர் வரிசையில் களம் இறங்கும் வீரர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். முரளி விஜய், லோகேஸ் ராகுல் அனுபவம் வாய்ந்த வீரர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர். தற்போது அவர்கள் எவ்வளவு மனஉறுதியுடன் உள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

விக்கெட் விழும்போது விராட் கோலி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது? அவர் ஒரு ஜென்டில்மேன்.

அடிலெய்டில் பெற்ற வெற்றியால் அதிக நம்பிக்கையால் பெர்த் டெஸ்டில் விளையாடினோம் என்று கூறுவது தவறு. அந்த டெஸ்டில் எங்களுக்கு வெற்றிபெற வாய்ப்பு இருந்தது. தற்போது தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. எங்களது வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அதற்கான தகுதி, திறமை அவர்களிடம் உள்ளது. காயம் அடைந்த அஸ்வின் குணம் அடைந்து வருகிறார். அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News