செய்திகள்

பெர்த் டெஸ்ட்: இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்கு- லோகேஷ் ராகுல் டக், புஜாரா 4 ரன்னில் அவுட்

Published On 2018-12-17 08:20 GMT   |   Update On 2018-12-17 08:20 GMT
பெர்த் டெஸ்டில் முகமது ஷமியின் அபார பந்து வீச்சால் ஆஸி. 243 ரன்னில் ஆல்அவுட் ஆகி, இந்தியாவின் வெற்றிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 283 ரன் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 123 ரன்னும், ரகானே 51 ரன்னும் எடுத்தனர். நாதன் லயன் 5 விக்கெட்டும் ஸ்டார்க், ஹசில்வுட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா 41 ரன்னும், டிம் பெய்ன் 8 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 175 ரன்கள் முன்னிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது. கவாஜாவும், கேப்டன் டிம் பெய்னும் இந்திய பந்து வீச்சை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு விளையாடினர். 60.4-வது ஓவரில் அந்த அணி 150 ரன்னை தொட்டது. கவாஜா சிறப்பாக விளையாடி 155 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 37-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 14-வது அரைசதமாகும்.

இந்த ஜோடியை பிரிக்க இயலாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள். இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து ரன்களை குவித்தது. மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா 67 ரன்னும், டிம் பெய்ன் 37 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகுதான் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தது. முகமது‌ ஷமி அடுத்தடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். டிம் பெயின் (37 ரன்), ஆரோன் பிஞ்ச் (25 ரன்) ஆகியோரை அவுட் செய்தார். அதைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த உஸ்மான் கவாஜா விக்கெட்டையும் வீழ்த்தினார். அவர் 213 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.


6 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி

அதைத்தொடர்ந்து கம்மின்ஸ் (1 ரன்), லயன் (5 ரன்) ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலிய அணி 207 ரன்னில் 9 விக்கெட்டை இழந்தது. வழக்கம்போல கடைசி விக்கெட் ஜோடி இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டியது. ஒரு வழியாக கடைசி விக்கெட்டாக ஸ்டார்க்கை (14 ரன்) பும்ரா வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி 93.2 ஓவரில் 243 ரன்கள் எடுத்து ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் இந்தியாவிற்கு 287 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

முகமது ‌ஷமி அபாரமாக பந்து வீசி 56 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.


விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டார்க்

287 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. 13 ரன்கள் எடுப்பதற்குள் (3.5 ஓவர்) இந்தியா 2 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்திலும், புஜாரா 4 ரன்னில் ஹசில்வுட் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்தியா 17 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Tags:    

Similar News