search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெர்த் டெஸ்ட்"

    எந்த வீரரும் காயம் அடையாத பட்சத்தில் கடைசி இரு டெஸ்டில் லோகேஷ் ராகுலுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கக்கூடாது என இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். #SunilGavaskar #KLRahul #IndiavsAustralia
    மும்பை:

    பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. பெர்த் டெஸ்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக இந்த டெஸ்டில் சொதப்பிய ராகுலை (2 ரன் மற்றும் 0) கடுமையாக விமர்சித்துள்ளார். கவாஸ்கர் கூறியதாவது:-



    தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து நமது அணியில் வீரர்கள் தேர்வில் தொடர்ந்து மிகப்பெரிய தவறு நடந்து வருகிறது. இதனால் பாதிப்பு அணிக்கு தான். வீரர்கள் தேர்வு சரியாக இருந்திருந்தால் பல போட்டிகளில் வெற்றி பெற்று இருக்க முடியும். குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை களைந்து, சரியான கலவையில் அணியை தேர்வு செய்தால் நிச்சயம் எஞ்சிய இரு டெஸ்டில் வெற்றி பெற முடியும். ஸ்டீவன் சுமித், வார்னர் ஆகியோர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை வெல்ல முடியாமல் போனால், அதன் பிறகு இந்திய கேப்டன், பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு குறித்து தேர்வு குழு சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

    எந்த வீரரும் காயம் அடையாத பட்சத்தில் கடைசி இரு டெஸ்டில் லோகேஷ் ராகுலுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கக்கூடாது. அவர் தாயகம் திரும்பி, கர்நாடக அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று கருதுகிறேன். பெர்த் டெஸ்டின் முதலாவது நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் மார்கஸ் ஹாரிசும், ஆரோன் பிஞ்சும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழலை நன்றாக சமாளித்து நிலைத்து நின்று ஆடியதே போட்டியில் திருப்பு முனையாகும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.  #SunilGavaskar #KLRahul #IndiavsAustralia
    பெர்த் டெஸ்டில் எங்களைவிட சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியானது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    இந்த டெஸ்டில் நாங்கள் அணியாக சிறப்பாக செயல்பட்டதாகவே கருதுகிறேன். ஆஸ்திரேலிய அணி எங்களைவிட பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்தது. இந்த ஆடுகளத்தில் இது அதிகமான ரன்னே. ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியான அணியே.

    நாங்கள் நம்பிக்கையுடன் விளையாடியபோது ஆஸ்திரேலிய பவுலர்கள் எங்களுக்கு இடைவிடாது நெருக்கடியை ஏற்படுத்தி விட்டனர். அவர்கள் அதில் மிகுந்த திறமையுடன் செயல்பட்டனர்.

    ஆடுகளத்தை (பிட்ச்) பார்த்தபோது நாங்கள் ஜடேஜாவை பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் லயன் சிறப்பாக பந்து வீசினார். சுழற்பந்து வீரர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் ஒருபோதும் யோசிக்கவில்லை. 4 வேகப்பந்து வீரர்கள் போதுமானது என்று கருதுதினோம்.

    நாங்கள் விரும்பிய முடிவை பெறாததால் ஆட்டத்திறன் குறித்து சொல்வது பொருத்தமற்றது. அடுத்த டெஸ்டில் கவனம் செலுத்துவதுதான் இனி நோக்கமாக இருக்கும்.



    எனக்கு கொடுக்கப்பட்ட முடிவு (சர்ச்சைக்குரிய கேட்ச்) குறித்து ஆடுகளத்தில் எடுக்கப்பட்டது. அது அங்கேயே முடிந்துவிட்டது. இதற்கு மேல் ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன் கூறும்போது, “இந்த வெற்றியால் நிம்மதி அடைகிறோம். எங்களது வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார்.
    பெர்த் டெஸ்டில் முகமது ஷமியின் அபார பந்து வீச்சால் ஆஸி. 243 ரன்னில் ஆல்அவுட் ஆகி, இந்தியாவின் வெற்றிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 283 ரன் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 123 ரன்னும், ரகானே 51 ரன்னும் எடுத்தனர். நாதன் லயன் 5 விக்கெட்டும் ஸ்டார்க், ஹசில்வுட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா 41 ரன்னும், டிம் பெய்ன் 8 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 175 ரன்கள் முன்னிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது. கவாஜாவும், கேப்டன் டிம் பெய்னும் இந்திய பந்து வீச்சை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு விளையாடினர். 60.4-வது ஓவரில் அந்த அணி 150 ரன்னை தொட்டது. கவாஜா சிறப்பாக விளையாடி 155 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 37-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 14-வது அரைசதமாகும்.

    இந்த ஜோடியை பிரிக்க இயலாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள். இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து ரன்களை குவித்தது. மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா 67 ரன்னும், டிம் பெய்ன் 37 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகுதான் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தது. முகமது‌ ஷமி அடுத்தடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். டிம் பெயின் (37 ரன்), ஆரோன் பிஞ்ச் (25 ரன்) ஆகியோரை அவுட் செய்தார். அதைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த உஸ்மான் கவாஜா விக்கெட்டையும் வீழ்த்தினார். அவர் 213 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.


    6 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி

    அதைத்தொடர்ந்து கம்மின்ஸ் (1 ரன்), லயன் (5 ரன்) ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலிய அணி 207 ரன்னில் 9 விக்கெட்டை இழந்தது. வழக்கம்போல கடைசி விக்கெட் ஜோடி இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டியது. ஒரு வழியாக கடைசி விக்கெட்டாக ஸ்டார்க்கை (14 ரன்) பும்ரா வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி 93.2 ஓவரில் 243 ரன்கள் எடுத்து ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் இந்தியாவிற்கு 287 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

    முகமது ‌ஷமி அபாரமாக பந்து வீசி 56 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.


    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டார்க்

    287 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. 13 ரன்கள் எடுப்பதற்குள் (3.5 ஓவர்) இந்தியா 2 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்திலும், புஜாரா 4 ரன்னில் ஹசில்வுட் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்தியா 17 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை சேர்க்காதது மிகப்பெரிய தவறு என மைக்கேல் வாகன், சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளனர். #AUSvIND #Jadeja #SunilGavaskar #MichaelVaughan
    பெர்த்:

    பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.

    ஆடுகளம் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் விகாரி 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் முதன்மை சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்து இருக்கலாம் என்று கருத்து எழுந்துள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியதாவது:-



    அணியில் ஜடேஜாவை சேர்க்காதது மிகப்பெரிய தவறு. அடுத்து சில நாட்களில் சுழற்பந்து வீச்சாளரை சேர்க்காதது பற்றி கோலி நிச்சயம் சிந்திப்பார் என்றார்.

    இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறும்போது,



    அஸ்வின் காயம் அடையாமல் இருந்தால் கண்டிப்பாக அணியில் இடம் பெற்று இருப்பார். ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்காதது தவறு. ஜடேஜா கூட பந்தை சுழற்றுவார். 4-வது நாளில் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடுவது கடினமானது என்றார். #AUSvIND #Jadeja #SunilGavaskar
    பெர்த் டெஸ்டில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சை சமாளித்து ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் அஸ்வின், ரோகித் சர்மா நீக்கப்பட்டு உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான களம் இறங்கிய ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் விளையாடியது. மதிய உணவு இடைவேளை 26 ஓவரில் விக்கெட் 66 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஆரோன் பிஞ்ச் 103 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் அரைசதத்துடன் வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தது.


    ஷேன் மார்ஷ்

    பின்னர் உஸ்மான் கவாஜா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அரைசதம் அடித்த ஹாரிஸ் 70 ரன்னில் வெளியேறினார். ஹேண்ட்ஸ்காம்ப் 7 ரன்னில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா 148 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.


    பும்ரா பந்தில் ஆட்டமிழந்த ஆரோன் பிஞ்ச்

    ஐந்தாவது விக்கெட்டுக்கு ஷேன் மார்ஷ் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஷேன் மார்ஷ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

    7-வது விக்கெட்டுக்கு கேப்டன் டிம் பெய்ன் உடன் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா இன்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. டிம் பெய்ன் 16 ரன்னுடனும், பேட் கம்மின்ஸ் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா தொடக்க பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தனர். அதன்பின் இந்தியா அபாரமாக பந்து வீச விரைவாக நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. #AUSvIND
    பெர்த்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. புதிதாக கட்டப்பட்ட இம்மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்திய அணியில் காயம் காரணமாக விலகிய ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோருக்குப் பதிலாக ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் இடம் பிடித்தனர். ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

    வேகம் மற்றும் பவுன்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்ட ஆப்டஸ் மைதானம் முதலில் அதற்கு ஏற்றார்போல் செயல்படவில்லை. இதனால் ஆஸ்திரேலியா தொடக்க ஜோடி இந்திய வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. முதலில் பொறுமையாக விளையாடிய ஆரோன் பிஞ்ச் - ஹாரிஸ் ஜோடி பின்னர் வேகத்தை அதிகரித்தது. இந்தியாவின் 4 வேகப்பந்து வீச்சாளர்களையும் திறம்பட சமாளித்து பவுண்டரிகளாக அடித்தனர். இதனால் அந்த அணியின் ரன் வேகம் கூடியது.

    முகமது ஷமி பந்தில் ஆரோன் பிஞ்சிற்கு எல்.பி.டபிள்யூ அவுட் கேட்கப்பட்டது. நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததால் இந்தியா டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்தியது. ஆனால் பந்து ஸ்டம்பை தாக்கவில்லை என்பது தெரிந்தது. இதனால் இந்தியா டி.ஆர்.எஸ். முறையில் ஒரு வாய்ப்பை இழந்தது. அடுத்த பந்திலும் எல்டபிள்யூ கேட்டார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. பந்து ஸ்டம்பை தாக்கினாலும் நடுவர் முடிவு என்பது ரீபிளே-யில் தெரியவந்தது. இதனால் இந்தியா டிஆர்எஸ் கேட்டிருந்தாலும் பலன் இருந்திருக்காது.

    மதிய உணவு இடைவேளை வரை இருவரும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 26 ஓவரில் 66 ரன் எடுத்து இருந்தது. மார்கஸ் ஹாரிஸ் 36 ரன்னுடனும், ஆரோன் பிஞ்ச் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸ் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். அதன்பின் ஆரோன் பிஞ்சும் அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 112 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஆரோன் பிஞ்ச் 50 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.



    அதன்பின் வந்த உஸ்மான் கவாஜாவை 5 ரன்னில் உமேஷ் யாதவ் வெளியேற்றினார். சிறப்பாக விளையாடிய ஹாரிஸ் 70 ரன்கள் எடுத்த நிலையில் ஹனுமா விஹாரி பந்தில் வெளியேறினார். மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. ஷேன் மார்ஷ் 8 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தேனீர் இடைவேளைக்குப்பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஹேண்ட்ஸ்காம்ப் 7 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு மார்ஷ் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது.

    ஆஸ்திரேலியா 69 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது,
    இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. #INDvAUS #INDvsAUS #BorderGavaskarTrophy
    பெர்த்:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரண்டாவது டெஸ்டை கைப்பற்றும் உத்வேகத்தில் ஆஸ்திரேலிய வீரர்களும், முதல் டெஸ்ட்டை வென்ற உற்சாகத்தில் இந்திய வீரர்களும் களமிறங்குகின்றனர்.

    இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக உமேஷ் யாதவ்வும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் இல்லை.



    இந்தியா:

    1. லோகேஷ் ராகுல், 2. முரளி விஜய், 3. சத்தீஸ்வர் புஜாரா, 4. விராட் கோலி, 5. அஜின்க்யா ரஹானே, 6. ஹனுமா விஹாரி, 7. ரிஷப் பந்த், 8. இஷாந்த் சர்மா, 9. முகமது ஷமி, 10. உமேஷ் யாதவ், 11. ஜேஸ்பிரிட் பும்ரா

    ஆஸ்திரேலியா:

    1. மார்கஸ் ஹாரிஸ், 2. ஆரோன் பிஞ்ச், 3. உஸ்மான் கவாஜா, 4. ஷான் மார்ஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 7. டிம் பெய்ன், 8. ஹசில்வுட், 9. பேட் கம்மின்ஸ், 10. நாதன் லயன், 11. மிட்செல் ஸ்டார்க். #INDvAUS #INDvsAUS #BorderGavaskarTrophy

    எப்படி நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதை ஆஸி. பேட்ஸ்மேன்கள் புஜாராவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இந்தியா விரைவில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியபோது, புஜாரா அணியை சரிவில் இருந்து மீட்டார். 246 பந்துகள் சந்தித்து 123 ரன்கள் அடிக்க இந்தியா 250 ரன்களை தொட்டது. 2-வது இன்னிங்சிலும் 200 பந்துகளுக்கு மேல் சந்தித்து அரைசதம் விளாசினார். இவரது ஆட்டத்தால் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அவர்கள் எப்படி நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதை புஜாராவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் ஆஸ்திரேலியா வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளரும் ஆன டீன் ஜோன்ஸ் இதுகுறித்து கூறுகையில் ‘‘புஜாரா தனது ஆட்டத்தை எப்படி நகர்த்தி செல்கிறார் என்பதை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் கவனிக்க வேண்டும். எனது அப்பா என்னிடம், ‘‘நீ ஐந்து மணி நேரம் பேட்டிங் செய்தால், சதம் உன்னைத்தேடி வரும்’’ என்பார். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் அவசரப்படுகிறார்கள்.

    ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 6 பேரில் பெரும்பாலானோர் அனுபவம் இல்லாதவர்கள். உஸ்மான் மட்டும்தான் முதல்தர போட்டிகளில் 40-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். ஆனால் இந்தியாவில் டாப் சிக்ஸ் பேட்ஸ்மேன்கள் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்கள்.

    சதம் எப்படி அடிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். புஜாராவை போல் எப்படி நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். நாதன் லயனை எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.



    பெர்த் ஆடுகளம் பந்தின் மீது சிராய்ப்பு ஏற்படும்போது, ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஒத்துழைக்கும். அதேபோல் சுழற்பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கும். ரிவர்ஸ் ஸ்விங் குறித்து ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட்டிற்கு நன்றாகத் தெரியும். அவர்கள் அதில் கவனம் செலுத்துவார்கள்.

    முகமது ஷமியும் சிறப்பாக ரிவர்ஸ் ஸ்விங் செய்வார். இதனால் அவர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். புதிய ஆடுகளம் பழைய வாகா பிட்ச் போன்று இருக்காது. ஸ்லோ டென்னிஸ் பால் பவுன்ஸ் இருக்கும்’’ என்றார்.
    பெர்த் ‘க்ரீன் பிட்ச்’ ஆஸ்திரேலியாவிற்கு பின்விளைவை ஏற்படுத்தும் என முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதனால் நாளை தொடங்கும் 2-வது டெஸ்டில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலியா ‘க்ரீன் பிட்ச்’ தயார் செய்துள்ளது.

    இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்காக ஆஸ்திரேலியா ‘க்ரீன் பிட்ச்’ தயார் செய்திருப்பது, அவர்களுக்கு எதிராகவே அமையும் என மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் இதுகுறித்து கூறுகையில் ‘‘இங்கிலாந்து மற்றும் அடிலெய்டு டெஸ்டில் அசத்திய பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் உறுதியாக இன்று இரவு சந்தோசத்துடன் தூங்கச் செல்வார்கள்.



    ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்களை விட அவர்கள் (பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா) சிறப்பாக பந்து வீசுகிறார்கள். அவர்களுடைய பந்து வீச்சு மிகவம் அபாரமாக உள்ளது. ‘க்ரீன் பிட்ச்’ மூலம் ஆஸ்திரேலியா மிகப்பெரிய சவாலை எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா இந்திய பேட்ஸ்மேன்களை விரைவில் வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் அடிலெய்டு டெஸ்ட் போட்டியை பார்த்த வகையில் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச் இல்லை. ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் போட்டி முழுவதும் நேர்த்தியாக பந்து வீசினார்கள்’’ என்றார்.
    பெர்த் டெஸ்டில் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசவில்லை என்றால் இந்தியாவிற்கு எதிரான மற்ற போட்டிகளில் இருந்து நீக்கப்படலாம் என்று மார்க் வாக் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகிய மும்மூர்த்திகளை கொண்டு இந்தியாவை சாய்த்து விடலாம் என்று ஆஸ்திரேலியா நினைத்தது. ஆனால், புஜாரா மற்றும் ரகானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனால் ஆஸ்திரேலியா அணி நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அடிலெய்டில் முதல் இன்னிங்சில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இது அவரது சிறந்த பந்துவீச்சு என்று ஆஸ்திரேலியா நினைக்கவில்லை.

    இந்நிலையில், கடந்த 12 மாதங்களாக தனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தாத ஸ்டார்க், பெர்த்தில் சிறப்பாக பந்து வீசவில்லை என்றால் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மார்க் வாக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மார்க் வாக் கூறுகையில் ‘‘கடந்த 12 மாதங்களாக ஸ்டார்க் அவரது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. சரியான லைன், லெந்த் மற்றும் தொடர்ச்சியாக சிறப்பாக பந்து வீசுவதில் சற்று திணறி வருகிறார். சில நேரம் மோசமான பந்துகளை வீசுகிறார். அதன்பின், அபாரமான பந்தை வீசுகிறார். புதுப்பந்தில் தொடர்ச்சியாக சிறப்பான பந்து வீச்சை அவர் வெளிப்படுத்துவதை பார்க்க விரும்புகிறேன்.

    பெர்த் ஆடுகளம் அவரது பந்து வீச்சுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். அவரால் பந்து குயிக்காகவும், பவுன்சராகவும் வீச முடியும். பெர்த்தில் சிறப்பாக பந்து வீச திணறினால், இந்த தொடரின் மற்ற போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்படலாம்’’ என்றார்.
    இந்தியாவிற்கு எதிராக நாளை தொடங்கும் பெர்த் டெஸ்டிற்கான ஆஸ்திரேலியா ஆடும் லெவன் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது.

    உலகின் அதிவேக ஆடுகளத்தைக் கொண்ட பெர்த் மைதானம். இங்குள்ள ஆடுகளத்தில் பந்துகள் அதிக அளவில் பவுன்சராகவும், வேகமாகவும் செல்லும். இதனால் பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் திணறுவார்கள். தற்போது பெர்த்தில் வெளியிடத்தில் வைத்து தயார் செய்யப்பட்ட ஆடுகளத்தை பயன்படுத்த இருக்கிறார்கள். முதன்முறையாக இந்த ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.

    பொதுவாக பெர்த் ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவில் இருக்காது. இதனால் பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும். ஸ்விங் பெரிய அளவில் இருக்காது. ஆனால் தற்போது ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. நாளைய ஆட்டத்திற்கு ஆடுகளம் ஒப்படைக்கப்படும்போது புற்கள் பெரிய அளவில் வெட்டப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் ஆடுகளம் எப்படி செயலாற்ற போகிறது என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பவுன்ஸ், வேகத்துடன் ஸ்விங் இருக்கும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியா ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோருடன் வேகப்பந்து ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் சேர்க்கப்படலாம் என்று தகவல் வெளியானது.



    இந்நிலையில் அடிலெய்டில் விளையாடிய அதே 11 பேர்தான் பெர்த்தில் களம் இறங்குவார்கள். ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெர்த் டெஸ்டில் விளையாடும் ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மார்கஸ் ஹாரிஸ், 2. ஆரோன் பிஞ்ச், 3. உஸ்மான் கவாஜா, 4. ஷான் மார்ஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 7. டிம் பெய்ன், 8. ஹசில்வுட், 9. பேட் கம்மின்ஸ், 10. நாதன் லயன், 11. மிட்செல் ஸ்டார்க்.
    ×