செய்திகள்

மழையால் ஓவர்கள் குறைப்பு - 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

Published On 2018-10-17 19:39 GMT   |   Update On 2018-10-17 19:39 GMT
இலங்கை - இங்கிலாந்து இடையிலான 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. #SLvENG
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவிற்கு வந்தது. 2-வது போட்டியில் மழை பாதித்தாலும் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையே பல்லேகலே மைதானத்தில் மூன்றாவது போட்டி நேற்று பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்றது. மழையால் ஆட்டம் 21 ஓவராக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி சார்பில் நிரோஷன் டிக்வெலாவும், சதிரா சமரவிக்ரமா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்வெலா 36 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, சதிராவும் 35 ரன்னில் வெளியேறினார்.  

அடுத்து இறங்கிய பேட்ஸ்மேன்கள் நீடித்து நிலைக்கவில்லை. இதனால் இலங்கை அணி நிர்ணயம் செய்யப்பட்ட 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.



இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் 4 விக்கெட்டும், டாம் கர்ரன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடி காட்டி 26 பந்தில் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

கேப்டன் இயன் மார்கன் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு பென் ஸ்டோக்ஸ் ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 18. 3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன், தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது அடில் ரஷித்துக்கு வழங்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஆட்டம் 20-ம் தேதி பல்லேகலே மைதானத்தில் நடக்கிறது. #SLvENG
Tags:    

Similar News