search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "one day match"

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது. #INDvsAUS
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலியில் நடந்த அடுத்த இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

    தொடக்க இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியா சறுக்கி விட்டது. குறிப்பாக மொகாலியில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இந்திய அணி 358 ரன்கள் குவித்த போதிலும் மோசமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதே போல் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டும் சில வாய்ப்புகளை வீணடித்தார். முதலில் பேட் செய்து இந்தியா 350 ரன்களுக்கு மேல் எடுத்தும் தோற்றது அது தான் முதல் தடவையாகும். பனிப்பொழிவால் பவுலர்களுக்கு பந்து வீசுவதற்கு சரியான ‘கிரிப்’ கிடைக்கவில்லை என்று கேப்டன் கோலி காரணம் சொல்லி நழுவினார். தற்போது, தவறுக்கு பரிகாரம் தேட வேண்டிய நேரமாகும்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி களம் இறங்கும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். உலக கோப்பைக்கு நம்பிக்கையான மனநிலையுடன் புறப்படுவதற்கு இந்த தொடரை வெல்வது அவசியமாகும்.

    கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்து வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்தனர். அதே போன்று இன்றைய ஆட்டத்திலும் விளையாடினால், மறுபடியும் பெரிய ஸ்கோரை எட்ட முடியும். இது, கேப்டன் விராட் கோலியின் சொந்த ஊர் ஆகும். இந்த தொடரில் ஏற்கனவே 2 செஞ்சுரி அடித்துள்ள கோலி சொந்த ஊரிலும் அசத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    டெல்லி ஆடுகளம் எப்போதும் வேகமின்றி (ஸ்லோ) காணப்படும். அதனால் இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும். இதையொட்டி இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அளித்த பேட்டியில், ‘4-வது ஒரு நாள் போட்டியில் ஆஷ்டன் டர்னருக்கு எதிராக நாங்கள் திட்டமிட்டபடி துல்லியமாக பந்து வீசவில்லை. ஆனால் மீண்டும் அதே போன்ற சூழ்நிலை எழுந்தால், நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறைகளிலும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

    ‘இந்த ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்திய இந்திய ஆடும் லெவன் அணியை அப்படியே உலக கோப்பை போட்டியிலும் தொடர வேண்டிய அவசியம் கிடையாது. உலக கோப்பை தொடரில் எந்த மாதிரியான கலவையில் வீரர்களை இடம் பெறச்செய்வோம் என்பது ஏறக்குறைய தெரிந்து விட்டது. ஆனாலும் அதற்கு முன்பாக எல்லாவிதமான பரிசோதனை முயற்சிகளையும் செய்து பார்க்க விரும்புகிறோம்’ என்றும் பரத் அருண் குறிப்பிட்டார்.

    ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை சரிவில் இருந்து எழுச்சி பெற்று அடுத்தடுத்து கிடைத்த வெற்றியால் புது தெம்பு அடைந்துள்ளது. உஸ்மான் கவாஜாவின் நிலையான ஆட்டம் அந்த அணியின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறது. முந்தைய ஆட்டத்தில் இமாலய இலக்கை எட்ட வைத்த பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் (117 ரன்), ஆஷ்டன் டர்னர் (43 பந்தில் 84 ரன்) ஆகியோரும் இன்றைய ஆட்டத்தில் கவனிக்கத்தக்க வீரர்களாக இருப்பார்கள். 2009-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்திய மண்ணில் தொடரை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணியினர் வியூகங்களை வகுத்துள்ளனர்.

    ஆஸ்திரேலிய துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான அலெக்ஸ் காரி அளித்த பேட்டியில், ‘நாங்கள் சில இந்திய உள்ளூர் பவுலர்களை கொண்டு வலை பயிற்சியில் ஈடுபட்டோம். இது உண்மையிலேயே நல்ல அனுபவமாக இருந்தது. அது மட்டுமின்றி கடந்த 12-18 மாதங்களாக சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளிப்பதில் கடினமாக உழைத்து வருகிறோம். அதற்குரிய பலனையும் பார்த்துள்ளோம். மீண்டும் இந்திய சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எங்களது வீரர்கள் நாளைய (இன்று) போட்டியில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இது தொடரை முடிவு செய்யும் ஆட்டம் என்பதால் சுவாரஸ்யமாக இருக்கும்’ என்றார். ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி அதன் பிறகு தொடரை வென்றதாக வரலாறு கிடையாது. அந்த பெருமையை இந்தியா தக்க வைத்துக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    டெல்லி மைதானத்தில் இந்திய அணி இதுவரை 19 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 12-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி இங்கு 5 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இவற்றில் இந்தியாவை எதிர்கொண்ட 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்டிருக்கிறது.

    2011-ம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 330 ரன்கள் குவித்தது, இங்கு ஒரு அணியின் சிறந்த ஸ்கோராகும். 1987-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 289 ரன்கள் எடுத்தது இந்தியாவின் அதிகபட்சமாகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல் அல்லது அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், கேதர் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.

    ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரி, கம்மின்ஸ், நாதன் லயன், ஜெயே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #INDvsAUS

    இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வென்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக 8-வது ஒரு நாள் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. #INDvWI
    திருவனந்தபுரம்:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் மற்றும் 4-வது போட்டி இந்தியாவும், 3-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. 2-வது போட்டி ‘டை’யில் முடிந்தது.

    இன்றைய ஆட்டத்தில் வென்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக 8-வது ஒரு நாள் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ் கடைசியாக 2006-ம் ஆண்டு மே மாதம் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது, அதன் பிறகு இரு நாடுகள் இடையே நடந்த 7 ஒரு நாள் தொடரையும் இந்திய அணி வென்று இருந்தது. தற்போதாவது தொடரை இழக்காமல் இருக்க சமன் செய்யும் வேட்கையில் அந்த அணி உள்ளது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 3-1, 2-1, 3-2, 4-1, 2-1, 2-1, 3-1 என்ற கணக்கில் 7 ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருந்தது. தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்திய அணி கடைசியாக சொந்த மண்ணில் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதன் பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்தது இல்லை.

    தொடர்ச்சியாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி வருகிறது. அந்த சாதனை தொடர்ந்து நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #INDvWI
    வெஸ்ட் இண்டீசுடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஒரு ரன்னை எடுப்பதன் மூலம் மகேந்திர சிங் டோனி புதிய மைல்கல்லை எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #INDvsWI #Dhoni
    திருவனந்தபுரம்: 

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்தாலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

    இந்நிலையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி  திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

    எம்.எஸ்.டோனி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 331 போட்டிகளில் விளையாடி 10,173 ரன்கள் குவித்துள்ளார். இதில், ஆசிய அணிக்காக அவர் எடுத்த 174 ரன்களும் அடங்கும். இதன்மூலம் அவர் இந்திய அணிக்காக மட்டும் தற்போது 9,999 ரன்களில் உள்ளார்.

    இன்றைய போட்டியில் அவர் 1 ரன் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 10,000 ரன்களை கடக்கும் 5-ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இந்த மைல் கல்லை டோனி எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. #INDvsWI #Dhoni
    புனேவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. #INDvWI #ViratKohli
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    கியெரன் பொவேல், சந்த்ரபால் ஹெம்ராஜ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹெம்ராஜ் 15 ரன்களிலும், பொவேல் 21 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய ஷாய் ஹோப் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது போட்டியில் விளையாடியது போல் அபாரமாக விளையாடியது. ஹெட்மையர் 37 ரன்னிலும், ரோவ்மேன் பொவேல் 4 ரன்னிலும், ஜேசன் ஹோல்டர் 32 ரன்னிலும் அவுட்டாகினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப் 95 ரன்களில் அவுட்டானார்.

    9-வது வீரராக களம் இறங்கிய நர்ஸ் அதிரடியாக ஆடி 22 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் குவித்தார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் சேர்த்தது.

    இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.



    இதையடுத்து, 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    ரோகித் சர்மா 8 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி நிதானமாக ஆடினார்.  ஷிகர் தவான் 35 ரன்னிலும், அம்பதி ராயுடு 22 ரன்னிலும், ரிஷப் பந்த் 24 ரன்னிலும் அவுட்டாகினர். டோனி 7 ரன்னில் வெளியேறியதால் இந்தியா நெருக்கடிக்கு ஆளானது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விராட் கோலி தனி மனிதனாக போராடினார். அபாரமாக ஆடி சதமடித்த கோலி 107 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதையடுத்து, இந்தியா 47.4 ஓவரில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சாமுவேல்ஸ் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர், மெக்காய், நர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-1- என தொடரில் சமனிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி 29ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. #INDvWI #ViratKohli
    ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் மகேந்திர சிங் டோனியின் சாதனையை விராட் கோலி இன்று முறியடித்துள்ளார். #INDvWI #ViratKohli #MsDhoni
    புனே:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
     
    கவுகாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 323 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டம் வெற்றி-தோல்வியின்றி ‘டை’ ஆனது. வெஸ்ட் இண்டீஸ் 321 ரன்னை எடுத்து ‘டை’ செய்து பாராட்டை பெற்றது.

    இன்று நடைபெறும் 3-வது போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் அதே வேட்கையுடன் இருக்கிறது.

    ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் டோனி 4-வது இடத்தில் உள்ளார். அவரை 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி கேப்டன் விராட் கோலி முந்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.



    டோனி 273 இன்னிங்ஸ் விளையாடி 10,143 ரன் எடுத்து உள்ளார். கோலி 205 இன்னிங்சில் 10,076 ரன் எடுத்துள்ளார். டோனியை முந்த அவருக்கு இன்னும் 66 ரன் தேவைப்பட்டது.

    இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் அணி 284 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

    இந்திய அணி 27 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது விராட் கோலி 68 ரன்கள் அடித்து டோனியின் சாதனையை முறியடித்தார். ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி நான்காவது இடத்துக்கு முன்னேறினார்.
     
    தெண்டுல்கர் 18,426 ரன்னுடன் முதல் இடத்திலும், கங்குலி 11,363 ரன்னுடன் 2-வது இடத்திலும், டிராவிட் 10,405 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #INDvWI #ViratKohli #MsDhoni
    சிட்டகாங்கில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் அபார வெற்றி பெற்றது. #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்காள தேசம் வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் சிட்டகாங்கில் 2-வது ஒருநாள் போட்டி பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காள தேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.
     
    தொடக்க வீரர்கள் மசகட்சா (14), செப்ஹாஸ் (20) சொற்ப ரன்களில் வெளியேறினாலும், அடுத்து வந்த பிராண்டன் டெய்லர் (75), வில்லியம்ஸ் (47), சிகந்தர் ரசா (47) சிறப்பாக விளையாடினார்கள். இதனால் ஜிம்பாப்வே 50 ஓவரில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 246 ரன்கள் சேர்த்தது.



    வங்காள தேச அணியின் மொகமது சயிபுதின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, வங்காள தேசம் 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் லித்தன் தாஸ் மற்றும் இம்ருல் கயாஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    இருவரும் பொறுப்புடனும், நிதானமாகவும் ஆடி அரை சதமடித்தனர். லித்தன் தாஸ் 83 ரன்னிலும், இம்ருல் கயாஸ் 90 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய பசே மகமது ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

    தொடர்ந்து இறங்கிய முஷ்பிகுர் ரஹிம், மொகமது மிதுன் ஆகியோர் இறுதிவரை நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.    

    இறுதியில், வங்காள தேசம் அணி 44.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முஷ்பிகுர் ரஹிம் 40 ரன்னுடனும், மொகமது மிதுன் 24 ரன்னுடனும் களத்தில் நின்றனர். மொகமது சயிபுதின் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியுடன் தொடரையும் 2-0 என்ற கணக்கில் வங்காள தேசம் கைப்பற்றியுள்ளது. #BANvZIM
    இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. #INDvWI #ODI #ViratKohli
    ஐதராபாத்:

    ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இதற்கிடையே, இரு அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் தொடங்கியது. கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 8  விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
     
    கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது. ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, டோனி, ரி‌ஷப் பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

    பந்துவீச்சிலும் முகமது சமி, குல்தீப் யாதவ், சாகல், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், கலீல் அகமது ஆகியோர் உள்ளனர்.



    முதல் ஒருநாள் போட்டியில் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    சாமுவேல்ஸ், ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால் ஹேம்ராஜ், எவின் லீவிஸ், பாலெஸ் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர். பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர், கேமர் ரோச், ஜோசப், பிஷூ, ஆஸ்லேநர்ஸ், தாமஸ் ஆகியோர் உள்ளனர்.

    இப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், டோனி, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா அல்லது கலீல் அகமது.

    வெஸ்ட் இண்டீஸ்: சந்தர்பால் ஹேம்ராஜ், கீரன் பவெல், ஷாய் ஹோப், ஹெட்மயர், சாமுவேல்ஸ், ரோவ்மன் பவெல், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ் அல்லது பாபியன் ஆலென், கீமோ பால் அல்லது ஒஷானே தாமஸ் அல்லது அல்ஜாரி ஜோசப், தேவேந்திர பிஷூ, கெமார் ரோச். #INDvWI #ODI #ViratKohli
    ஜிம்பாப்வே அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #BANvZIM
    டாக்கா:

    ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    டாக்காவில் நேற்று தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின

    டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இம்ருல் காயேஸ் சிறப்பாக ஆடினார். அவர் 144 ரன்கள் அடித்தார், மொகமது சைபுதின் அரை சதமடித்தார்.

    மற்ற வீரர்கள்  நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.



    ஜிம்பாப்வே அணி சார்பில் கைல் ஜார்விஸ் 4 விக்கெட்டும், சதாரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியின் சீன் வில்லியம்ஸ் அரை சதமடித்தார். அவருக்கு யாரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கைல் ஜார்விஸ் 37 ரன்களும், செபாஸ் சுவாயோ 35 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 243 ரன்கள் மட்டுமே எடுத்து, 28 ர்ன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    வங்காளதேசம் அணி சார்பில் மெஹிடி ஹசன் 3 விக்கெட்டும், நஸ்புல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக இம்ருல் காயஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி 24-ம் தேதி நடைபெறுகிறது. #BANvZIM
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் சதமடித்ததன் மூலம் தெண்டுல்கர் சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார். #INDvWI #ViratKohli
    இந்தியாவின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 60-வது சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் அடங்கும்.

    இந்த இலக்கை எட்ட 386 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அதில் 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி 20 போட்டிகள் ஆகியவையும் அடங்கும்.



    இதன்மூலம்  குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பதிவுசெய்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். ஏற்கனவே, 426 இன்னிங்சில் 60 சதமடித்து சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #INDvWI #ViratKohli
    இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி தொடர் கவுகாத்தியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. #INDvWI #ODI #ViratKohli
    கவுகாத்தி:

    ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இரு அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி கவுகாத்தியில் இன்று தொடங்குகிறது.

    கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது. ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, டோனி, ரி‌ஷப் பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

    பந்துவீச்சிலும் முகமது சமி, குல்தீப் யாதவ், சாகல், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், கலீல் அகமது ஆகியோர் உள்ளனர்.
    இந்தியா வலிமையாக உள்ளதால் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    சாமுவேல்ஸ், ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால் ஹேம்ராஜ், எவின் லீவிஸ், பாலெஸ் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர். பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர், கேமர் ரோச், ஜோசப், பிஷூ, ஆஸ்லேநர்ஸ், தாமஸ் ஆகியோர் உள்ளனர்.

    வெஸ்ட்இண்டீஸ் அணியை குறைத்து மதித்துவிட முடியாது. எனவே, இந்தியா எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம். இப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், டோனி, ரி‌ஷப் பண்ட், மனீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், சாதல், முகமது சமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, கலீல் அகமது.

    வெஸ்ட்இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், சாமுவேல்ஸ், லீவீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால், ஹேம்ராஜ், ஆலன், பிஷூ, ஜோசப், நர்ஸ், கீமோபவுல், ரோவன் பாடுவல், கேமர் ரோச், தாமஸ். #INDvWI #ODI #ViratKohli 
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 4-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 3-0 என தொடரையும் கைப்பற்றியது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவிற்கு வந்தது. 2-வது, 3வது  போட்டியில் மழை பாதித்தாலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையே பல்லேகலே மைதானத்தில் நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி சார்பில் நிரோஷன் டிக்வெலாவும், சதிரா சமரவிக்ரமா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    நிரோஷன் டிக்வெலா பொறுப்பாக ஆடி 51 ரன்கள் எடுத்து அவுட்டானார். டாசன் ஷனாகா 66 ரன்களுடனும், திசரா பெராரா 44 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

    இறுதியில், தனஞ்செயா 33 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதனால் இலங்கை அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது.



    இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 2 விக்கெட்டும், டாம் கர்ரன், வோக்ஸ், அடில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் பொறுப்புடன் ஆடி 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  அலெக்ஸ் ஹேல்ஸ் 12 ரன்களில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஜோ ரூட் மற்றும் கேப்டன் இயன் மார்கன் ஆகியோர் சிறப்பாக ஆடி 56 ரன்கள் ஜோடி சேர்த்தனர். இங்கிலாந்து அணி 27 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது.

    இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    அத்துடன், தொடரில் 3-0 என முன்னிலை பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது இயன் மார்கனுக்கு வழங்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 5-வது ஆட்டம் 23-ம் தேதி கொழும்புவில் நடக்கிறது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவிற்கு வந்தது. 2-வது போட்டியில் மழை பாதித்தாலும் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையே பல்லேகலே மைதானத்தில் மூன்றாவது போட்டி நேற்று பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்றது. மழையால் ஆட்டம் 21 ஓவராக குறைக்கப்பட்டது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி சார்பில் நிரோஷன் டிக்வெலாவும், சதிரா சமரவிக்ரமா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்வெலா 36 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, சதிராவும் 35 ரன்னில் வெளியேறினார்.  

    அடுத்து இறங்கிய பேட்ஸ்மேன்கள் நீடித்து நிலைக்கவில்லை. இதனால் இலங்கை அணி நிர்ணயம் செய்யப்பட்ட 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.



    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் 4 விக்கெட்டும், டாம் கர்ரன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடி காட்டி 26 பந்தில் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

    கேப்டன் இயன் மார்கன் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு பென் ஸ்டோக்ஸ் ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 18. 3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன், தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது அடில் ரஷித்துக்கு வழங்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஆட்டம் 20-ம் தேதி பல்லேகலே மைதானத்தில் நடக்கிறது. #SLvENG
    ×