செய்திகள்

டாஸ் வெல்வதில் அதிர்ஷ்டம் இல்லாத விராட் கோலி

Published On 2018-09-03 11:33 GMT   |   Update On 2018-09-03 11:33 GMT
டெஸ்ட் போட்டிக்கு முக்கியமானதாக கருதப்படும் டாஸில் வெற்றி பெற முடியாமல் விராட் கோலி தவித்து வருகிறார். #ENGvIND
இந்திய டெஸ்ட் அணி சொந்த மண்ணில் விளையாடும்போது அபாரமான வெற்றிகளை குவித்து டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது. இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து இந்தியா வெளிநாட்டு மண்ணில் விளையாடி வருகிறது.

ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் டாஸ் வெல்வது முக்கியமாக விஷயம். ஏனெனில் டெஸ்ட் போட்டியை பொறுத்த வரையில் கடைசி இரண்டு நாட்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த மண்ணில் விளையாடும் அணிகள் தங்களுக்கு சாதகமான வகையில் ஆடுகளத்தை தயார் செய்கிறது.

இதனால் மூன்றாவது நாளில் இருந்தே பேட்டிங் செய்வது மிகமிக கடினமாக உள்ளது. ஆகவே டாஸ் வெல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்திய மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு டாஸ் வென்றதும் ஒரு காரணம்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்போடுதான் தென்ஆப்பிரிக்கா சென்றது.

தென்ஆப்பிரிக்காவில் ஆடுகளம் மிகவும் அபாயகரமானதாக தயார் செய்யப்பட்டிருந்தது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம் விராட் கோலி டாஸ் தோற்றதுதான். ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

3-வது நாளில் இருந்தே பந்து மிகவும் மோசமான வகையில் பவுன்சர் ஆகி பேட்ஸ்மேன்களை தாக்கியது. இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு காரணம் டாஸ் வென்றதே.

தற்போது இங்கிலாந்தில் இந்தியா விளையாடி வருகிறது. இங்கிலாநது சீதோஷண நிலை முற்றிலும் மாறுபட்டது. அங்கு எப்பொழுதும் மேகமூட்டாக காணப்படும் என்பதால் டாஸ் வெல்லும் அணி அன்றைய வானிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து டாஸ் வென்று பேட்டிங் அல்லது பந்து வீச்சை தேர்வு செய்யும்.



ஆனால் தற்போது இங்கிலாந்தில் வழக்கத்திற்கு மாறாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் ஆடுகளம் வறண்டு காணப்பட்டதால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யும் நிலை உருவானது.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்றது. 4-வது நாளில் இந்தியாவிற்கு 194 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்தியா 162 ரன்னில் சுருண்டு 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

2-வது டெஸ்ட் நடைபெற்ற லார்ட்ஸ் மைதானம் முதல் மூன்று நாட்கள் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும். ஆனால், லார்ட்ஸில் போட்டி தொடங்கிய முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

2-வது நாள் ஆட்டத்தின்போது மழை அச்சுறுத்தியது. மழை விட்டதால் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கண்ணை மூடிக்கொண்டு பந்து வீச்சை தேர்வு செய்தார். மழை விட்டு விட்டு பெய்து ஆடுகளம் ஸ்விங் பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்ததால், இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 130 ரன்னிலும் சுருண்டது. இதனால் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இந்தியா டாஸ் வென்றிருந்தாலும் கட்டாயம் பந்து வீச்சைதான் தேர்வு செய்திருக்கும்.

3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இந்த ஆடுகளத்தில் முதல்நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளை பேட்டிங் செய்ய மிகமிக கடினம். சுமார் 40 ஓவர்கள் தாக்குப்பிடித்து விட்டால் அதன்பின் 3-வது நாள் வரை பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.

இதனால் டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்யும். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சைதான் தேர்வு செய்தார். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட இந்தியா ரன்கள் குவித்து விட்டது. அத்துடன் வெற்றியை ருசித்தது.

4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு சாதகமாக இருக்கும். இந்த ஆடுகளத்தில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்குதான் தேர்வு செய்யும். 4-வது நாள் அல்லது 5-வது நாளில் 150 ரன்கள் சேஸிங் என்றாலே கடினம்தான்.



இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதேபோல் இந்தியா 4-வது இன்னிங்சில் 245 ரன்னை சேஸிங் செய்யும்போது 184 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்தது.

இந்தியாவின் தோல்விக்கு டாஸ் வெல்ல முடியாததும் ஒரு காரணமே. வெளிநாட்டு தொடர்களில் இதுவரை இந்தியா 7 டெஸ்டில் விளையாடி 5-ல் தோல்வியை சந்தித்துள்ளது. 2-ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் ஐந்து போட்டிகளில் விராட் கோலி டாஸ் தோல்வியடைந்துள்ளார். இதில் நான்கு முறை இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் விராட் கோலிக்கு டாஸ் வெல்லும் அதிர்ஷ்டம் கைக்கூட முடியாமல் உள்ளது.
Tags:    

Similar News