செய்திகள்

ரிஷப் பந்தின் அதிரடி சதம் வீண்- பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி 2 ரன்னில் தோல்வி

Published On 2018-02-15 13:34 GMT   |   Update On 2018-02-15 13:34 GMT
இளம் வீரரான ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதம் அடித்த போதிலும், பரபரப்பான ஆட்டத்தில் இமாச்சல பிரதேச அணியிடம் 2 ரன்னில் தோற்றது டெல்லி. #VijayhazareTrophy
விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இமாச்சல பிரதேச அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இமாச்சல பிரதேச அணி கேப்டன் பிரசாந்த் சோப்ரா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பிஎஸ் கந்தூரி, சோப்ரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கந்தூரி 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து சோப்ரா உடன் அமித் குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அமித் குமார் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சரியான இடைவெளியில் ஆட்டமிழந்தாலும், சோப்ரா நிலையாக நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 22 பவுண்டரி, 2 சிக்சருடன் 149 பந்தில் 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் இமாச்சல பிரதேசம் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது.

பின்னர் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் உன்முக்த் சந்த் 42 ரன்னும், தலால் 16 ரன்னும், ஷோரே 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு நிதிஷ் ராணாவுடன் விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனும் ஆன ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். ராணா நிதானமாக விளையாட, ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ராணா 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராணா - பந்த் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் குவித்தது. ராணா அவுட் ஆனபின் ரிஷப் பந்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க சரியான பார்ட்னர்ஷிப் அமையாததால் டெல்லி அணி இலக்கை எட்ட கஷ்டப்பட்டது.  இருந்தாலும் ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.


150 ரன்கள் குவித்த இமாச்சல கேப்டன் பிரசாந்த் சோப்ரா

டெல்லி அணி 47 ஓவரில் 289 ரன்கள் எடுத்திருக்கும்போது ரிஷப் பந்த் 93 பந்தில் 16 பவுண்டரி, 5 சிக்சருடன் 135 ரன்கள் குவித்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். அப்போது டெல்லி அணியின் வெற்றிக்கு 18 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கைவசம் 2 விக்கெட்டுக்கள் மட்டுமே இருந்தது.

சங்வான் 22 பந்தில் 17 ரன்னும், கடைசி விக்கெட்டாக இசாந்த் சர்மா ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணி 49.4 ஓவரில் 302 ரன்கள்  எடுத்து ஆல்அவுட் ஆனது. இன்னும் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் 2 பந்துகள் மீதம் இருந்த போதிலும் விக்கெட் இல்லாததால் டெல்லி அணி தொல்வியை சந்தித்தது. டெல்லி அணி 6 போட்டியில் நான்கு வெற்றிகள் பெற்று ‘பி’ பிரிவில் முதல் இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News