செய்திகள்

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தலைவர் நரீந்தர் பத்ரா தேர்வு

Published On 2017-12-14 13:09 GMT   |   Update On 2017-12-14 13:09 GMT
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தலைவரான நரீந்தர் பத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கும் பிற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கும் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தேர்வுசெய்யும் பொறுப்பு இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் உள்ளது. இந்தச் சங்கம் 1927 ஆண்டில் இருந்து இயங்கி வருகின்றது. 

இந்த அமைப்பின் தலைவராக நாராயண ராமசந்திரன் என்பவர் செயல்பட்டு வருகிறார். அதேபோல் ராஜீவ் மேத்தா செயலாளராக உள்ளார். இவர்களின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை ஒலிம்பிக் சங்கம் தொடங்கியது. 

இதையடுத்து தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்காக விண்ணப்பிக்கலாம் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்திருந்தது. தலைவர் பதவிக்காக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தலைவர் நரீந்தர் பத்ரா, முன்னாள் இந்திய டென்னிஸ் சங்க தலைவர் அனில் கண்ணா மற்றும் இந்தியா பளுதூக்குதல் சம்மேளன தலைவர் பிரேந்திர பைஷ்யா ஆகியோர் விண்ணப்பித்தனர். செயலாளர் பதவிக்காக தற்போதைய செயலாளர் ராஜீவ் மேத்தா மட்டும் விண்ணப்பித்தார். 


ராஜீவ் மேத்தா

பிரேந்திர பைஷ்யாவும், அனில் கண்ணாவும் தேர்தலுக்கு முன்னதாக வாபஸ் பெற்றனர். இதையடுத்து எதிர்த்து யாரும் போட்டியிடாததால் நரீந்தர் பத்ராவும், ராஜீவ் மேத்தாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறப்பட்டது. 

இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தின் போது நரீந்தர் பத்ரா தலைவராகவும், ராஜீவ் மேத்தா செயலாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Tags:    

Similar News