செய்திகள்

உலக ஹாக்கி லீக் பைனல்: ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா

Published On 2017-12-10 14:24 GMT   |   Update On 2017-12-10 14:24 GMT
ஒடிசாவில் நடந்து வரும் உலக ஹாக்கி லீக் பைனலில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் உலக ஹாக்கி லீக் பைனல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் போட்டிகள் முடிந்து இறுதி போட்டி மற்றும் மூன்றாவது இடத்துக்கான போட்டி  நடந்து வருகிறது.

இன்று மூன்றாவது இடத்துக்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜெர்மனி மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெல்லும் முனைப்புடன் இரு அணியினரும் விளையாடினர். 

இந்திய அணி தரப்பில் எஸ்.வி.சுனில ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

ஆனால், ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் மார்க் அப்பேல் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமன் அடைந்தது.

இதைத்தொடர்ந்து, இரு அணியினரும் தீவிரமாக விளையாடினர். ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன் பிரீத் சிங் கோலாக மாற்றினார்.

இதையடுத்து, இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின், ஜெர்மனியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இறுதியில், இந்தியா ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது.
Tags:    

Similar News