செய்திகள்

மம்தா பானர்ஜிக்கு உலக கால்பந்து சம்மேளனம் பாராட்டு

Published On 2017-11-04 07:46 GMT   |   Update On 2017-11-04 07:46 GMT
17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உலக கால்பந்து சம்மேளனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கொல்கத்தா:

இந்தியாவில் கடந்த அக்டோபர் 6-ந்தேதி 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கியது. லீக், நாக்அவுட், காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள் முடிவில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. கொல்கத்தாவில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், இங்கிலாந்து 5-2 என வெற்றி பெற்று 17 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன் பட்டத்தை வென்றது. பிரேசில் - மாலி அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டியில் பிரேசில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது. 

இந்நிலையில், இந்த 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரை நல்லபடியாக நடத்தி முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்த மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, உலக கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா மைதானத்தில் நடத்தப்பட்ட இறுதிப்போட்டி உட்பட அனைத்து போட்டிகளையும் சிறப்பாக நடத்தியதற்காகவும் தனிப்பட்ட முறையில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து உலக கால்பந்து சம்மேளனம் சார்பில் மேற்குவங்க முதல்வர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரை இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தி முடித்த  அரசாங்கத்தை நான் பாராட்டுகிறேன். இந்தியா வந்த எங்களுக்கு நல்ல வரவேற்பு அளித்து நல்ல முறையில்  விருந்தோம்பல் வழங்கியதற்காக உலக கால்பந்து சம்மேளனத்தின் அனைத்து பிரதிநிதிகள் சார்பாக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கால்பந்து விளையாட்டை வளர்ச்சியடைய செய்து அதன் மதிப்புகளை ஊக்குவித்த மேற்குவங்க அரசுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கால்பந்து விளையாட்டிற்கான சிறப்பு தேசிய மையம் அமைக்க 15 ஏக்கர் நிலம் அளித்து உதவ முடிவுசெய்துள்ள மம்தா பானர்ஜியை ஜியானி இன்ஃபாண்டினோ பாராட்டியுள்ளார்.
Tags:    

Similar News