செய்திகள்

பல்லேகலே டெஸ்ட்: முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள்

Published On 2017-08-12 13:21 GMT   |   Update On 2017-08-12 13:21 GMT
பல்லேகலேயில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கெதிரான கடைசி போட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகலேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஜடேஜாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இலங்கையின் பந்து வீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால், இந்தியாவின் ரன்விகிதம் சீராக சென்று கொண்டிருந்தது.


அஸ்வின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெர்னாண்டோ

9.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 17.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. தவான் 45 பந்திலும் லோகேஷ் ராகுல் 67 பந்திலும் அரைசதம் கடந்தனர்.

முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இந்தியா விக்கெட் இழப்பின்றி 27 ஓவரில் 134 ரன்கள் சேர்த்தது. ராகுல் 67 ரன்னுடனும், தவான் 64 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்த லோகேஷ் ராகுல்

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்தியா 30.4 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. இந்தியாவின் ஸ்கோர் 39.3 ஓவரில் 188 ரன்களாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. லோகேஷ் ராகுல் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புஷ்பகுமாரா பந்தில் ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு தவான் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய தவான் 107 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 119 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 47.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கடந்த இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்த புஜாரா 8 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ரகானே (17), விராட் கோலி (42) என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் அப்படியே தவழ ஆரம்பித்தது. தவான் அவுட்டான பிறகு இந்தியா 42.5 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.


3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி புஷ்பகுமாரா

6-வது விக்கெட்டுக்கு அஸ்வின் உடன் சகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும்வரை ஆட்டத்தை கொண்டு செல்லும் என்று நினைக்கையில், 88-வது ஓவரில் அஸ்வின் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

7-வது விக்கெட்டுக்கு சகா உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 90 ஒவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் சேர்த்துள்ளது. சகா 13 ரன்னுடனும், ஹர்திக் பாண்டியா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் புஷ்பகுமாரா அதிகபட்சமாக 3 விக்கெட்டும், சண்டகான் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
Tags:    

Similar News