செய்திகள்

தேசிய தடகளம்: ஈட்டி எறிதலில் அனு ராணி சாதனை

Published On 2016-09-30 03:46 GMT   |   Update On 2016-09-30 03:46 GMT
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அனு ராணி புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
லக்னோ :

56-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதலில் 24 வயதான ரெயில்வே வீராங்கனை அனு ராணி 60.1 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். 

ஐதராபாத்தில் கடந்த ஜூலை மாதம் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான தேசிய போட்டியில் அனு ராணி 59.87 மீட்டர் தூரம் வீசியதே சாதனையாக இருந்தது. தனது சொந்த சாதனையை தகர்த்த அனுராணி கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக தேசிய சாதனையை படைத்து இருக்கிறார். அத்துடன் 60 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டெல்லி வீரர் தேஜஸ்வின் ஷங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கமும், சர்வீசஸ் வீரர் சேத்தன், கேரள வீரர் ஸ்ரீனித் மோகன் ஆகியோர் தலா 2.20 மீட்டர் உயரம் தாண்டி முறையே வெள்ளி மற்றும் வெண்கலமும் வென்றனர். இந்திய தடகள வரலாற்றில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற 3 வீரர்களும் 2.20 மீட்டரை தாண்டியது இதுவே முதல் முறையாகும். 

Similar News